உம்ரா பயணிகளை ஏமாற்றி நட்டாற்றில் விடும் முகவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பதிவுகளும் கூட ரத்து செய்யப்படலாம் என முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம் எம். எப் ஸமீல் நவமணிக்கு தெரிவித்தார்.
கடந்த சில வாரங்களாக உம்றா பயணிகள் , முகவர்களால் ஏமாற்றப்படும் அதிகமான சம்பவங்கள் இடம் பெற்றுள்ளமை தொடர்பாக கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து இதுபற்றி கருத்துத் தெரிவித்த அவர், ஒரு சில முகவர் நிலையங்கள் மோசடியான முறையில் செயற்பட்டு வருவதாகவும் பயணிகளிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டு பல மாத காலமாக அவர்களை உம்றாவுக்கு அனுப்பாது ஏமாற்றி வருவது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
முகவர் நிலையங்களால் பயணிகள் ஏமாற்றப்படும் பட்சத்தில் அது தொடர்பாக 0112675367 என்ற இலக்கத்தோடு தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை பதிவு செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
உம்றா பயணிகள் விழிப்பாக இருக்க வேண்டும். மோசடியான முகவர்களை நிராகரிக்க வேண்டும், மிகவும் நம்பிக்கையான நாணயமான, நேர்மையான முகவர்களை தொடர்பு கொண்டு அவர்கள் மூலமாக தனது பயணத்தை மேற்கொள்ள வேண்டும். குறைந்த கட்டணத்தில் அழைத்துச் செல்வதாக வானெலியில் விளம்பரம் செய்து பயணிகளை ஏமாற்றும் முகவர் விடயத்தில் சகலரும் அவதானமாக இருக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
கடந்த சில வாரங்களாக உம்றா பயணிகளை ஏமாற்றும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. கடந்த வாரம் விமான நிலையத்துக்கு இஹ்ராம் உடையுடன் சென்ற 24 பயணிகள் முகவர் நிலையத்தால் ஏமாற்றப்பட்டதையடுத்து தமது வீடுகளுக்கு கூட திரும்பி செல்ல முடியாது அல்லல் பட்டனர். இதற்கு முன்பும் பணத்தை வாங்கி பயணிகளை பல மாத காலமாக அலைக்கழித்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. வானெலியில் தொடர்ச்சியாக விளம்பரம் செய்யும் பிரபல முகவர் நிலையமொன்றின் மோசடியான நடவடிக்கைகள் குறித்து பயணிகள் சிலர் நவமணியோடு தொடர்பு கொண்டு தமது ஆதங்கங்களை தெரிவித்துள்ளனர். 59,000 ரூபாவுக்கு (இன்னுமொரு நிறுவனம் 65 ஆயிரம் ரூபாவுக்கு) உம்றாவுக்கு அழைத்துச் செல்வதாக வானெலியில் தொடர்ச்சியாக விளம்பரம் செய்யும் பிரபல முகவர் நிலையமொன்றின் செயற்பாடுகளால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதையும் விபரித்துள்ளனர்.