ஜனாதிபதிச் செயலாளர் லலித் வீரதுங்க தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வருகின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 25வது கூட்டத்தொடரில் பங்குபற்று வதற்காக எதிர்வரும் 23ஆம் திகதி ஜெனீவா புறப்படவுள்ளதாக நம்பத்தகுந்த அரச தரப்பு தகவல்கள் தெரிவித்தன.
இக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய
உறுப்புரிமை நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு இலங்கையின் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் குறித்து விளக்கமளிப்பர்.
ஜெனீவாவில் நடைபெறுகின்ற ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்காவினால் சமர்பிக்கப்பட்ட உத்தேச வரைபின் கேள்வி நேரம் இம்மாதம் 20ஆம் திகதியின் பின்னர் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்போது வெளிநாட்டு இராஜ தந்திரிகளால் எழுப்பப்படும் கேள்விகளுக்கு இலங்கையிலிருந்து செல்லும் இக்குழு உரிய விளக்கங்களை அளிப்பதன் மூலம் அரசாங்கத்துக்கு வலு சேர்க்கவுள்ளது.
வெளிவிவகார அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அதிகாரிகளே இந்த உயர்மட்ட குழுவில் அங்கம் வகிக்கவிருப் பதாகவும் தெரியவந்துள்ளது.
ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை யினால் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட அறிக்கைக்கான பதிலளிக்கையினை வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் ஜெனீவாவில் கடந்த 05ஆம் திகதி தனது உரையின்போதும் 06ஆம் திகதி நவிபிள்ளையுடனான தனிப்பட்ட சந்திப்பின்போதும் முன்வைத் திருந்தார். இதுக் குறித்த வாதப் பிரதி வாதங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.