BREAKING NEWS

யோகட், தயிர், நெய், பால் போன்ற உற்பத்திப் பொருட்கள் நாளாந்தம் கொண்டு வரப்பட்டு விற்பனைக்கு

-எம்.வை.அமீர்-
அண்மையில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் கால்நடைகளுக்கு 1992ம் ஆண்டின் 59ம் இலக்க விலங்கு நோய் சட்டத்தின் முதலாம் அட்டவணையில் பட்டியல் படுத்தப்பட்டுள்ள குறித்துரைக்கப்பட்டுள்ள நோய்களில் ஒன்றான கால்வாய் எனப்படும் நோய் விலங்குகளுக்கு ஏற்பட்டுள்ளதாக அறியப்பட்டதால் கால்நடை உற்பத்தி சுகாதார பணிப்பாளர்,1850/30 ஆம் இலக்கம் 2014.02.19ம் திகதிய அதி விசேட வர்த்தமான பத்திரிகையுடாக பின்வரும் தடைகளை விதித்திருந்தார்.

• நோய் தொற்றத்தக்க விலங்குகளில் செயற்கை முறை இனவிருத்தி முறைகளை மேற்கொள்ளல்;
• நோய் தொற்றத்தக்க விலங்குகளை அறுத்தல்;
• நோய் தொற்றத்தக்க விலங்குகள் சம்மந்தப்பட்டவாறான உயிர் விலங்குச் சந்தைகள், கண்காட்சிகள் போட்டி நிகழ்ச்சிகள் நடத்துதல்;
• நோய் தொற்றத்தக்க விலங்குகளை அல்லது அவற்றின் உற்பத்திப் பொருட்களை,நோய்த்தாக்கம் கொண்ட பொருட்கள் விற்றல், விற்பனைக்கு காட்சிப்படுத்துதல், விற்பனைக்கு விடுதல், களஞ்சியப்படுத்துதல், விநியோகித்தல் அல்லது பகிர்தல்;
• குறித்த சில பிரதேசங்களில் கால்வாய் நோய் தாக்கத்துக்கு உள்ளான கால்நடைகள் சில இனம்கானப்பட்டதால் கட்டம் கட்டமாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி சபைகள் கால்நடைகளை அறுப்பதற்கான தடையை விதித்துள்ளன.
இருந்தபோதும் வர்தமானப் பத்திரிகையில் இலக்கம் 2 (ஈ) என்ற பந்தியில் கூறப்பட்டுள்ள
• நோய் தொற்றத்தக்க விலங்குகளை அல்லது அவற்றின் உற்பத்திப் பொருட்களை, நோய்த்தாக்கம் கொண்ட பொருட்கள் விற்றல், விற்பனைக்கு காட்சிப்படுத்துதல், விற்பனைக்கு விடுதல், களஞ்சியப்படுத்துதல், விநியோகித்தல் அல்லது பகிர்தல்;
எனும் கூற்றுக்கு அமைவாக எந்த உள்ளுராட்சி சபைகளோ அல்லது இது விடையத்தில் கவனம் செலுத்தவல்ல நிறுவனங்களோ கவனம் செலுத்தவில்லை.
இப்போதும் கூட வர்த்தமானியில் குறித்துரைத்த பிரதேசங்களில் இருந்து யோகட், தயிர், நெய், பால் போன்ற உற்பத்திப் பொருட்கள் நாளாந்தம் கொண்டு வரப்பட்டு விற்பனைக்கு விடப்படுகின்றன.
இவைகள் விடயத்தில் உள்ளுராட்சி சபைகளும் சம்மந்தப்பட்டோரும் கவனம் செலுத்துவார்களா?
தற்போது ஏற்பட்டுள்ள தெளிவின்மை தொடர்பாக அம்பாறை மாவட்ட கால்நடை வைத்திய அதிகாரி எம்.சீ.ஜுனைட் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது அம்பாறை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் கால்வாய் நோய் பரவியுள்ளதை உறுதிப்படுத்தினார்.
கால்வாய் நோய் காரணமாக மனிதர்களுக்கு பாதிப்பு சம்மந்தமாக வினவிய போது;
இதுவரையும் மனிதர்களுக்கு உடலியல் ரீதியான பிரட்சினை இல்லை என்று தெரிவித்த வைத்தியர், விலங்குகள் பாதிக்கப்படுவதால் பொருளாதார ரீதியில் மக்கள் பாதிக்கப்படுவர் என்று குறிப்பிட்டார்.
கால்நடை உற்பத்திகளை பாவிப்பது தொடர்பில் வினவியபோது;
கால்நடை பண்ணைகளில் இருந்து மாற்றுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது பாதிக்கப்பட்ட விலங்கில் இருந்து நோய்க்கிருமிகள் ஏனைய பிரதேசத்தில் உள்ள விலங்குகளை தாக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாக் குறிப்பிட்டார்.
விலங்கு மேய்ப்போர், அங்கு சென்று வரும் வாகனம் மற்றும் பொருட்கள் ஊடாக குறித்த நோய் பரவக் கூடிய வாய்ப்புள்ளதால் நோய் கட்டுப்பாட்டுக்கு வரும் வரை கால்நடை உற்பத்திப் பொருட்களை தவிர்ப்பது சிறந்தது என்றும் தெரிவித்தார்.
நேற்று 27.02.2014ல் கல்முனை மாநகரசபை முதல்வர் நிஸாம் காரியப்பர் தலைமையில் கால்நடை வியாபாரம் செய்வோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது உணவுக்கு கால்நடைகளை அறுப்பதை இன்றுமுதல் 14 நாட்களுக்கு நிறுத்தி வைப்பது என தீர்மானிக்கப்பட்டது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar