BREAKING NEWS

இலவச வைத்திய முகாமில் ஆயிரம் நோயாளர்கள் நன்மைகளைப் பெற்றனர்


- பைஸர் முஸ்தபா மன்றம் ஏற்பாடு

(( ஐ. ஏ. காதிர் கான் )


பைஸர் முஸ்தபா மன்றம்,  இலவச  வைத்திய சிகிச்சை முகாமொன்றை, கடந்த (08 ஆம் திகதி) சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை, கொழும்பு -10,  மாளிகாவத்தையில் அமைந்துள்ள, வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் நடாத்தியது.

இந்த வைத்திய முகாம் நடைபெற்ற அன்றைய தினமே  இங்கு சிகிச்சை பெற வந்தோருக்கு, இலவசமாக மருந்து வகைகள் வழங்கப்பட்டதாக,  பைஸர் முஸ்தபா மன்றம் தெரிவித்தது, இந்த இலவச வைத்திய முகாமில் சுமார் ஆயிரம் நோயாளர்கள் நன்மைகளைப் பெற்றுக் கொண்டனர்.
பைஸர் முஸ்தபா மன்றத்தின் சமூக நலச் சேவைத் திட்டங்களில் ஒன்றான இந்நிகழ்வில், ஸ்ரீல. சு. க. மத்திய கொழும்பு அமைப்பாளரும் , முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சருமான “ஜனாதிபதி சட்டத்தரணி” பைஸர் முஸ்தபா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வைத்திய முகாம் நிகழ்வை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
கொழும்பு மாநகர சபையின் ஆளும் கட்சி பிரதான எதிரணித் தலைவரும், கொழும்பு மாவட்ட ஐ.ம.சு. முன்னணியின் வேட்பாளருமான எம்.எச். மன்ஸில், மாநகர சபை உறுப்பினர் றீஸா ஸரூக் உள்ளிட்ட பலரும்;  இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பைஸர் முஸ்தபா மன்றம், தேவை நாடும் மகளிர் அமைப்புடன் இணைந்து, மகளிர் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக இடம் பெறும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பெண்களை அறிவுறுத்தும் விழிப்புணர்வுக் கருத்தரங்கொன்றை, அண்மையில் கிறேண்ட்பாஸில் ஏற்பாடு செய்திருந்தது.
  இதே வேளை, லங்கா ஐ.ஓ.சீ. நிறுவனத்துடன் இணைந்து, கொழும்பு மாவட்டத்தில் இயங்கும் 15 ஞாயிறு சமயப் பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 12 வயதிற்கும் 18 வயதிற்கும் இடைப்பட்ட 1,500 மாணவர்களுக்கான 6 மாத கால ஆங்கில மொழிக் கற்கை நிகழ்ச்சித் திட்டமொன்றை, கொழும்பு மாவட்டத்தில் கடந்த (2014) ஜனவரி மாதம் முதல் ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar