BREAKING NEWS

சட்டி சுட்டதடா! கெட்ட புத்தி கெட்டதடா!



Hakeem-1-300x225

இன்றுள்ள நிலைமையை பார்க்கும்போது அரசாங்கத்தோடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சேராமலேயே இருந்திருக்கலாம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப்; ஹக்கீம் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடியில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி மத்திய குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர்பீட உறுப்பினருமான யு.எல்.எம்.என்.முபீன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது;
“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டதனால் கட்சியை பாதுகாக்க வேண்டுமானால் நாம் கட்டாயம் அரசாங்கத்துடன் இணைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அப்போது அரசாங்கத்துடன் இணைவதுதான் பொருத்தமென கட்சியின் பெரும்பாலானவர்கள் வற்புறுத்தினார்கள். கட்சியில் எஞ்சியுள்ளவர்களையும் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை காணப்பட்டதால் தான் அரசாங்கத்தில் சேர்ந்தோம்.
இன்று அரசாங்கத்துடன் இணைந்து மூன்றரை வருடங்களாகின்றன. ஆனால், இன்றுள்ள நிலைமைகளை பார்க்கின்றபோது அரசாங்கத்தோடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சேராமலேயே இருந்திருக்கலாமென்று எண்ணத் தோன்றுகின்றது.
கட்சி குறித்த கவலை அனைவருக்கும் இருக்கின்றது. விமர்சனங்களுக்கு கட்சியின் தலைமை முகம் கொடுக்க வேண்டியுமுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெறும் உணர்வு ரீதியாக அவசரப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுத்து விட முடியாது.
இதய பூர்வமாக கட்சி ஆதரவாளர்களை அழைத்து கலந்துரையாடல்களை நடத்த வேண்டியுள்ளது. ஆதரவாளர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெறவேண்டியுள்ளது. கட்சியின் அமைப்பு வேலைகளையும் பலப்படுத்த வேண்டியுள்ளது.
அடுத்த வருடம் தேசிய மட்டத்தில் தேர்தலொன்று நடைபெறக்கூடிய சூழ்நிலையுள்ளது. அது ஜனாதிபதித் தேர்தலாகவோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலாகவோ இருக்கலாம். இன்றுவரை ஜனாதிபதித் தேர்தலொன்றுக்கான சாத்தியங்கள் காணப்படுவதாகவே கூறப்படுகின்றது. எனினும், இனிவரும் மாற்றங்களைப் பொறுத்து முடிவுகள் மாறக்கூடிய நிலையுமுள்ளது.
ஊவா மாகாணத்தில் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் அனைவரும் ஒன்றுபட்டு நின்றால் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள முடியும். ஊவா மாகாணசபைத் தேர்தலில் அனைவரும் ஒன்றுபட வேண்டியுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபை கலைக்கப்பட்டு ஒரு வருடமாகின்றது. இதற்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பலப்படுத்த வேண்டும். இம்மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸுக்கு அமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர் ஆகியோர் உள்ளனர். அவர்களின் ஆலோசனைகளுடன் கட்சியை பலப்படுத்த வேண்டும்.
கல்குடாத் தொகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்பான எந்தத் தீர்மானம் எடுப்பதாக இருந்தாலும், அவற்றை கல்குடாத் தொகுதியிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களின் ஆலோசனையுடனேயே மேற்கொள்ளப்படும்” என்று குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் அமைச்சருமான பசீர் சேகுதாவூத், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.அஸ்லம் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar