BREAKING NEWS

ஆட்சியை தீர்மாணிக்கும் சக்தியாக உருவாகினால் இனவாத அரசை கட்டுப்படுத்தலாம்

முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒற்றுமைப்பட்டு ஆட்சியை தீர்மாணிக்கும் சக்தியாக உருவாகினால்த்தான் இனவாத அரசை கட்டுப்படுத்தலாம் என முஸ்லிம்கள் தரப்பில் நினைப்பது யதார்தத்தை ஏற்காமல் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகும்.  கடந்த கால நிகழ்வுகளை நாம் கட்சி வெறிக்கப்பால் நின்று பார்க்கும் போது ஆட்சியை தீர்மாணித்தல் என்பது எத்தகைய பலனை முஸ்லிம் சமூகத்துக்கு பெற்றுத்தந்துள்ளது என்பதற்கான விடையை  அறியலாம்.

1994 ம் அண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியை தீர்மாணிக்கும் சக்தியாக பரிணாமம் பெற்றது. இதன் மூலம் முஸ்லிம் சமூகம் தனது உரிமைகளைப்பெற்றதா என்றால் இல்லை என்ற பதிலே தெளிவானதாகும்.
அந்த ஆட்சியில் மு. கா தலைவர் அஷ்ரப் அதிகார பலமுள்ள அமைச்சராக இருந்தார். அத்துடன் அவர் இயற்கையாகவே சமூக அக்கறையுள்ளவராக இருந்த காரணத்தால் துறைமுகத்தில் பல முஸ்லிம்களுக்கு வேiலைய வாய்ப்பை தனது அர்ப்பணிப்பால் பெற்றுக்கொடுத்தார். அதே போல் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தையும் நிறுவினார். இது தவிர கல்முனையை தலைநகராகக்கொண்ட கல்முனை மாவட்டம், தனி அலகு போன்ற எதுவுமே பெறப்படவில்லை. ஆகக்குறைந்தது ஒரு மௌலவிக்கேனும் ஆசிரிய நியமனம் வழங்க கிடைக்கவில்லை. அதே போல் முஸ்லிம்களின் காணிப்பிர்சினைகள், எல்லைப்பிரச்சினை, வீடில்லாப்பிரச்சின போன்ற பல பிரச்சினைகளுக்கு முஸ்லிம்கள் ஆட்சியை தீர்மாணிக்கும் சக்தியாக இருந்தும் கூட முடியவில்லை என்பதை கசப்பாக இருந்தாலும் ஜீரணித்துத்தான் ஆக வேண்டும்.  இதற்கு மாறாக அஷ்ரப் மூலம் திகவாப்பி வளம் பெற்றது. சும்;மா கிடந்த அந்தப்பகுதி ஒளிர வைக்கப்பட்டது. அந்த அளவுக்கு ஒரு முஸ்லிம் கிராமம் என்ன ஒரு கொலணியாவது ஒளி பெறவில்லை.

அதே வேளை தமிழர் கட்சிகள் ஆட்சியை தீர்மாணிக்கும் சக்தியாக இல்;லாத நிலையிலும் அரசை பலமாக எதிர்ப்பவர்களாக இருந்த வேளையிலும்  கிழக்கு பல்கலைக்கழகம் உருவாகிற்று. மாகாண சபைகள் உருவாகின. கல்முனையில் தமிழ் மக்களுக்கென உப செயலகம் உருவாகியது. இவ்வாறு பல விடயங்களை தமிழ் மக்கள் ஆட்சியை தீர்மாணிக்கும் சக்தியாக இல்லாத நிலையிலேயே  அதுவும் அரசை எதிர்த்து நின்றதால் கிடைக்கப்பெற்றார்கள் என்பதை வைத்து பார்க்கும் போது ஆட்சியை தீர்மாணித்தல் என்ற கோஷம் செல்லாக்காசாகி விடுகிறது.

ஆக, ஆட்சியை தீர்மாணிக்கும் சக்தியாக முஸ்லிம்கள் இருப்பதால் மட்டும் அரசாங்கம் நமது உரிமைகளை தராது. ஆனால் கொஞ்ச காhலத்துக்கு முஸ்லிம் அரசியல் தலைவருக்கு சுயமாக செயற்படக்கூடிய அமைச்சை வழங்கும். அந்த அமைச்சராக ரஊப் ஹக்கீம் போன்றோர் இருந்தால் எதவுமே உருப்படியாக முஸ்லிம்களுக்கு கிடைக்காது. இதனை நாம் கற்பனையாகவோ அல்லது ஹக்கீம் மீதுள்ள எரிச்சல் காரணமாகவோ கூறவில்லை. மாறாக கடந்த கால அனுபவங்களை வைத்தே கூறுகிறோம். 2001ம் ஆண்டு ஹக்கீம் தலைமையில் முஸ்லிம்  காங்கிரஸ் கட்சி ஆட்சியை தீர்மாணிக்கும் சக்தியாக இருந்து ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியை ஆட்சிக்கு கொண்டு வந்தது. இதன் போது முஸ்லிம் காங்கிரசுக்கு 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். பெரும்பாலான முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்பட்டு தமது அரசியல் சக்தியை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
ஆட்சியை தீர்மாணிக்கும் சக்தியாக மு. கா இருந்ததால் அதன் தலைவர் ஹக்கீமுக்கு, துறைமுகம், முஸ்லிம் கலாசார அமைச்சு என பல சிறந்த அமைச்சுக்கள் வழங்கப்பட்டன. இந்த ஆட்சி சுமார் இரண்டு வருடங்கள் நீடித்தது.
ஆட்சியை தீர்மாணித்து அஷ்ரப் பெற்றதைவிட அதிகமான அமைச்சுக்களை ஹக்கீம் பெற்றும் முஸ்லிம் சமூகம் தனது உரிமைகளை பெற்றதா? தனது பாதுகாப்பை பெற்றதா? அந்த கால பகுதியில்தான் வாழைச்சேனையில் இரண்டு முஸ்லிம்கள் அரச இராணுவம் பார்த்திருக்க எரிக்கப்பட்டார்கள். ஹக்கீம் மூதூருக்கு வந்திருந்த வேளையில் மூதூர் தாக்கப்பட்டது.
துறைமுக அமைச்சராக அஷ்ரப் இருந்த போது பலருக்கு அங்கு தொழில்வாய்ப்பை வழங்கினார். அதைவிட அதிக அதிகாரம் கொண்ட ஹக்கீமினால் எத்தனை பேருக்கு நியமனம் வழங்க முடிந்தது? முஸ்லிம் கலாசார அமைச்சராக இருந்தும் ஒரு மௌலவிக்கேனும் ஆசிரிய நியமனம் வழங்கப்படவில்லை. அதே போல் முஸ்லிம்களின் எந்தவொரு உரிமையும் கிடைக்கப்பெறவில்லை.

ஆக முஸ்லிம்கள் ஏற்கனவே ஆட்சியை தீர்மாணிக்கும் சக்திளாக இரண்டு தடவைகள் இருந்தும் தமது உரிமைகள் எதனையும் பெறவில்லை என்பதே நூறு வீத உண்மையாகும்.  இந்த நிலையில் தோற்றுப்போன இந்தக்கோஷத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதால் எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக தோற்றுப்போன ஒரு கோசத்தை வைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் அரசியல்வாதிகள் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றுவதற்கு துணை போனதாகவே முடியும்.
அப்படியாயின் முஸ்லிம் அரசியல் சக்திகள் என்ன செய்வது?
இதற்கான பதிலை ஆராயுமுன் நமது இலங்கை வரலாற்றை பார்க்கும் போது முஸ்லிம் காங்கிரஸ் ஸதாபகத்துக்கு முன்னிருந்த நிலையை பாhத்தால் அங்கு நாம் ரி. பி. ஜாயா, எம் எஸ் காரியப்பர், பதியுதீன் மஹ்மூத், ஏ சி எஸ் ஹமீத், ஏ ஆர் மன்சூர், எம். சி அஹமத் போன்ற அரசியல் ஜாம்பவான்களை காணலாம். இவர்கள் தனிக்கட்சியாக அரசை தீர்மானிப்பவர்களாக இல்லாத நிலையிலும் ஆட்சியில் இருந்த கட்சியை சேர்ந்தோர்களாக இருந்தார்கள். அத்துடன் சமூக உணர்வு, சமூகத்தை ஏமாற்ற நினைக்காமை, தாம் சேவை செய்தால்த்தான் மீண்டும் வெற்றி பெற முடியும் போன்ற பல காரணங்களால் முஸ்லிம் சமூகம் பாரிய வளங்களை பெற்றது. பதியுதீன் மஹ்முத் முஸ்லிம் சமூகத்துக்கு செய்த கல்விப்புரட்சியை போன்றதொரு புரட்சியை அஷ்ரபாலும் செய்ய முடியவில்லை என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ஆனால் ஹக்கீம் தலைமையில் இந்த 14 வருட காலங்களுள்; முஸ்லிம் காங்கிரஸ் சமூகத்துக்கு எந்த நன்மையும் செய்யாத நிலையில் முஸ்லிம்கள் அக்கட்சிக்கு தொடர்ந்தும் வாக்களித்து வருவதால் நாம் எதையும் செய்யாமலேயே இந்த சமூகத்தை ஏமாற்றி வெல்லலாம் என்ற மனப்பாங்கு காரணமாக அக்கட்சியை சேர்ந்தோர்  செயல்திறண் அற்று காணப்படுகிறார்கள். முஸ்லிம்களும் கடந்த கால அரசியல் வரலாறை உணராமல் அக்கட்சி ஆட்சியை தீர்மாணிக்கும் சக்தியாக வந்தால் தமக்கு எல்லாம் கிடைக்கும் என்றெண்ணி ஏமாந்து தமது தலையில் தாமே மண் அள்ளப்போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

அப்படியாயின் இதற்கு தீர்வு என்ன?
முதலில் இதுவொரு ஜனநாயக நாடு என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஆளும் கட்சியை புடம் போடுவதற்காக எதிர்க்கட்சியும் தேவை என்பதற்காகவே தேர்தல் முறைகள் உள்ளன. ஆளுங்கட்சி தவறு செய்தால் அதனை எதிர்க்கட்சி சுட்டிக்காட்டுவதன் காரணமாக ஆளுங்கட்சி அச்சம் கொள்கிறது. இந்த ஜனநாயக முறை முஸ்லிம் அரசியலில் இல்லை. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து முஸ்லிம் கட்சிகளும் அரசுக்கே ஆதரவளிப்பதால் அவை விடும் தவறுகள் இன்னொரு முஸ்லிம் கட்சியால் சுட்டிக்காட்டப்பட வழியில்லை. காரணம் பாராளுமன்ற எதிரணியில் இன்னொரு முஸ்லிம் கட்சி இல்லை. ஆகவே முஸ்லிம்கள் தமக்கென முஸ்லிம் எதிர்க்கட்சியையும் வலுப்படுத்த வேண்டிய தேவையில் உள்ளனர். அப்போதுதான் தாம் மக்களுக்கு சேவை செய்யாவிட்டால் அந்த எதிர் கட்சி முன்னேறிவிடும் என்ற அச்சம் காரணமாக இவர்களும் சேவை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

அத போல் ஆட்சியை தீர்மாணிக்கும் சக்தியாக வருவோம் என்ற பொய்யாகிப்போன வாதத்தை விடுத்து சமூகத்துக்கு துணிச்சலுடன் சேவை செய்யக்கூடிய அரசியல்வாதிகளை கட்சி மோகத்துக்கப்பால் நின்று தெரிவு செய்வோம் என்ற தெளிவு சமூகத்துக்கு குறிப்பாக புத்திஜீவிகளுக்கு வர வேண்டும். வெறும் பொம்மை அரசியல்வாதிகளை ஆட்சியை தீர்மாணிக்கும் சக்தியாக மாற்றி மீண்டும் மீண்டும் சமூகம் ஏமாற வேண்டாம்.
-முபாறக் அப்துல் மஜீத், தலைவர், உலமா கட்சி

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar