தமிழினத்திற்கு சாபக்கேடு த.தே.கூட்டமைப்புதான். இராமாயணத்தில் கூனியாகவும் பாரதத்தில் சகுனியாகவும் இயங்கும் இவர்களால் தமிழினம் விடிவுகாணுமா? திருமண வீட்டிற்குச் சென்று தாசிகளைப் பாராட்டும் த.தே.கூ. நல்லவைகளைப் பாராட்டும் என்று எதிர்பார்க்க முடியாதென பியசேன எம்.பி. தெரிவித்தார்.
காரைதீவுப் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை காரைதீவு பிரதேச சபை தவிசாளராக நியமிக்கப்பட்டிருக்கும் வை.கோபிகாந், உபதவிசாளர் க.தட்சிணாமூர்த்தி உறுப்பினர்களான சு.பாஸ்கரன், எம்.ஏ.பாயிஸ். பியசேன எம்.பி.யின் இணைப்புச் செயலாளர் எம்.ஐ.றியாஸ் மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.எம்.ஜெளபர் ஆலய பிரதிநிதிகள், பொதுமக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அங்கு மாகணா சபை உறுப்பினர் கலையரசன் உரையாற்றுகையில், அன்று தொடக்கம் இன்றுவரை தமிழ் பேசும் சமூகத்தின் உரிமைக்காக கொண்ட கொள்கை மாறாமல் பலவித போராட்டங்களை முன்னெடுத்து இன்றும் போராடிவரும் ஒரே கட்சி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பது அனைவருக்கும் தெரியும்.
தேர்தலில் த.தே.கூட்டமைப்பினர் நின்று தமிழ் மக்களது வாக்குகளால் வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினராகி அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் நீங்கள் பொத்துவில் முதல் நீலாவணை ஈறாகவுள்ள தமிழ்ச்சமூகம் நிம்மதியாக வாழ இதுவரை எந்தவொரு ஆக்கபூர்வமான திட்டத்தையாவது முன்னெடுத்துள்Zர்களா? அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் தாய்மார்களுக்கு வாழ்வாதார உதவிகளைச் செய்துள்ளாரா என்று கேள்வியெழுப்பினார். பாராளுமன்ற உறுப்பினர் பி.பியசேன அதற்கு பதிலளித்து உரையாற்றுகையில்
நான் தமிழ்ப் பிரதேசத்திற்கு நிதி ஒதுக்குவதில்லை எனக்கூறுகிறார்கள்.
உதாரணத்திற்கு காரைதீவை மட்டும் சொல்கிறேன். காரைதீவு சண்முகா வித்தியாலயத்திற்கு 70 இலட்சம் ரூபா இ.கி.மி.பெண்கள் பாடசாலைக்கு 56 இலட்சம் ரூபா, பாலையடி வால விக்னேஸ்வரர் ஆலயத்திற்கு 46 இலட்சம் ரூபா. கமநலசேவை நிலையத்திற்கு 34 இலட்சம் ரூபா. விபுலானந்த மத்திய கல்லூரிக்கு 26 இலட்சம் ரூபா. என சுமார் 232 இலட்சம் ரூபாவை அதாவது இரண்டரைக் கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளேன்.
தரவைப்பிள்ளையார் ஆலயம் தம்பிலுவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் போன்ற பல ஆலயங்களுக்கு வரம்புக்கு மீறி உதவியுள்ளேன். அக்கரைப்பற்றிலும் பனங்காட்டிலும் ஆலயங்களுக்கு ஒதுக்கிய நிதி த.கூட்டமைப்பின் ஆணவச் செயற்பாட்டால் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
தேர்தல் காலத்தில் கூறியதுபோல பூதம்போல் சேவைசெய்யவே ஆசைப்பட்டேன். அதற்கு அரசும் கோடிகோடியாக தருகிறது. அடுத்த முறை எம்.பி.யாக வருவதோ இல்லையோ அதைப்பற்றிக் கவலையில்லை. என்னிடம் வருவோருக்கு உதவிசெய்கிறேன்.
நான் தேசியக்கட்சியைச் சார்ந்தவன். சகல இனத்திற்கும் உதவி செய்வேன். முஸ்லிம்கள் என்னிடம் வந்து கேட்கிறார்கள். நான் கொடுக்கின்றேன். கேட்டால் தரப்படும். தமிழ் மக்கள் என்னிடம் வந்து கேட்பதில்லையே, யார் கேட்டாலும் கொடுப்பேன் என்றார்.