குருக்கள்மட புதை குழியில் அடக்கம் செய்யப்பட்டோரின் உறவினர்களின் முறைப்பாடுகளை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. நாளை (08) செவ்வாய்க்கிழமை வரை இவர்களிடமிருந்து முறைப்பாடுகள் பதிவு செய்யப்படவுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி இந்திக லொகுகே தெரிவித்தார்.
1990ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட த்தின் குருக்கள் மடம் புகுதியில் வைத்து கடத்திக் கொலை செய்யப்பட்டு காணாமல் போனோரின் உறவினர்கள் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர் களின் சடலங்களைத் தோண்டுமாறு கோரி களுவாஞ்சிக்குடி பொலிஸில் முறைப்பாடுகளைச் செய்தனர். காத்தான்குடி யைச் சேர்ந்தவர்கள் முறைப்பாடுகளை செய்வதற்கு களுவா ஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்திற்கு செல்வது சிரமம்.
எனவே அதைக் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு ஏற்பாடு செய்து தருமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் மட்டக் களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் கேட்டுக்கொண்டார். மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலுக்க மைய களுவாஞ்சிக்குடி பொலிஸார் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் வைத்து இவர்களின் முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சி. ஐ. இந்திக லொகுகே தலைமையில் இந்த முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் நடவடிக்கை இடம் பெற்றது. 12-7-1990 அன்று கல்முனையிலிருந்து காத்தான்குடி நோக்கிச் சென்ற தமது உறவினர்களை குருக்கள் மட்டத்தில் வைத்து விடுதலைப் புலிகள் கடத்திக் கொலை செய்து அப் பிரதேசத்தில் புதைத்துள்ளதாகவும் அப்புதைக்குழியைத் தோண்டி இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர் களின் புதைகுழி ஓகஸ்ட் மாதம் 18ம் திகதி தோண்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.