கிழக்கின் முதலமைச்சர் பதவியைப் பெற்று எவ்வித சாதனையையும் சாதித்து விடமுடியாது; ஹசன் அலி
,கேள்வி: ஊவா மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் எதிர்பாராத கூட்டில் சேர்ந்திருப்பது ஐ.தே.கட்சிக்குப் பாதகத்தையும் அரசுக்கு ஆதரவையும் ஏற்படுத்தும் நோக்குடன் கூடிய விடயமா?
பதில்: இந்தக் கால கட்டத்தில் முஸ்லிம்களுக்கு பக்கசார்பான ஒற்றுமை எந்த வகையிலும் சரி வராது. மிக மோசமான சம்பவங்களை இந்த நாட்டில் முஸ்லிம் சமூகம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றது.
எனவே, இக்கால கட்டத்தில், முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட்டுத் தனித்துவமாக, சமூக ரீதியான விடயங்களை முதன்மைப்படுத்தி அரசியல் செய்ய வேண்டிய சூழல் தோன்றியிருக்கிறது என்பதைத்தான் இந்த முறைமை வெளிப்படுத்துகின்றது.
ஊவாவில் ஒன்றுபட்டு போட்டியிடும் வியூகத்தை முஸ்லிம் காங்கிரஸோ, அகில இலங்கை மக்கள் காங்கிரஸோ, துஆ கட்சியோ அமைக்கவில்லை. ஊவா மாகாண முஸ்லிம்கள் அமைத்த வியூகமே இது.
அங்குள்ள முஸ்லிம்கள் விடுத்த வேண்டுகோளின் பேரில்தான் நாங்களெல்லோரும் – முஸ்லிம் கட்சிகள் உள்ளே – போயிருக்கின்றோம்.
இதில் ஐ.தே.கட்சியைத் தோற்கடிக்க வேண்டுமென்றோ அரச தரப்பைப் பலப்படுத்த வேண்டுமென்றோ நோக்கம் எதும் இல்லை. எனது பார்வையில் ஊவாவில் நாம் எடுத்துள்ள இந்த முடிவு ஐ.தே.கட்சிக்கு ஒரு பலமென்றே கருதுகின்றேன்.
எமது கூட்டினால் அநேகமான முஸ்லிம்கள் அங்கு ஒரு திசையை நோக்கித் திரும்பும் கட்டம் வந்துள்ளது. எனவே, இந்த விடயம் மக்களுடைய ஏற்பாடு என்பதால் இது குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
இந்நிலையில் அரசுக்கு முஸ்லிம்களுடைய வாக்குகள் நிச்சயம் மிக மிகக் குறைவாகவே கிடைக்குமென்பது உறுதி.
இதில் ஐ.தே.க.வினர் திருப்திப்பட்டுக் கொள்ளலாம். பொதுபலசேன, சிஹல ராவய போன்ற பெளத்த வெறி கொண்ட அமைப்புகள் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவரும் அடாவடிச் செயல்களுக்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாதலால் நிச்சயமாக ஊவாத் தேர்தலில் இதற்கான முஸ்லிம்களின் அதிருப்தி எதிரொலிக்கும். இனி வரப்போகும் எல்லாத் தேர்தல்களிலும் இந்த அதிருப்தி எதிரொலிக்கும்.
கேள்வி: எப்படியிருப்பினும் தேர்தல் முடிந்த பின்னர் உங்கள் கூட்டிலிருந்து தெரிவுசெய்யப்படுபவர்கள் அரசின் பக்கம் சார்ந்து ஊவாவில் ஆட்சியமைக்க ஆதரவளிப்பரா?
பதில்: இக்கால கட்டத்தில் ஊவா மாகாண சபையில் முஸ்லிம் ஒருவர் உறுப்பினராக இருக்க வேண்டும். இதை உறுதிப்படுத்துவதே எமது நோக்கமாகும்.
அரசின் பக்கம் சார்வது நோக்கமல்ல. முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரென்ற வகையில், எமது கட்சி சார்ந்த ஒருவர் வெற்றி பெற்றால், அவர் நிச்சயம் எப்பக்கமும் சாரமாட்டாரென்ற உறுதியை நான் கூறுகின்றேன்.
கேள்வி : ஊவாவில் – அதாவது பதுளை மாவட்டத்தில் – இன்று முஸ்லிம் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள கூட்டு பலராலும் வரவேற்கப்படும் நிலையில், எதிர்காலத்தில் வரப்போகும் தேர்தல்களில் இந்த ஒற்றுமை தொடருமா?
பதில்: இது நல்லதொரு கேள்விதான். எதிர்காலத்தில் நாம் இப்படியொரு கூட்டில் இணைவதானால் எமது கட்சிக்கு – முஸ்லிம் காங்கிரஸுக்கு – உள்ள அடிப்படைக் கொள்கைகள் பற்றி நாம் சிந்திக்க வேண்டியிருக்கும்.
முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரை வடக்கு, கிழக்குப் பிரதேசம் தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்ற கோட்பாடுள்ளது. முஸ்லிம்கள் இந்த நாட்டில் அரசியல் ரீதியாகத் தனித்துவ அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு நிலத் தொடர்புள்ள ஓர் அரசியல் அதிகாரம் கிடைக்க வேண்டும்.
அந்த கோட்பாட்டின் அடிப்படையில்தான் முஸ்லிம் மாகாணம், தென்கிழக்கு அலகு, கரையோர மாவட்டம் என்ற விடயங்களை எல்லாம் எமது மறைந்த தலைவர் அஷ்ரப் இந்த சமூகத்திற்குத் தெளிவாகச் சொல்லியுள்ளார்.
அந்தக் கோட்பாடுகளே இன்றும் முஸ்லிம் காங்கிரஸின் அடிப்படைக் கோட்பாடாகவுள்ளன. இதனை மக்கள் ஆணை மூலம் புதுப்பித்துக் கொண்டு வருகின்றோம்.
ஒவ்வொரு தேர்தலிலும் இதையே நாம் மேடைகளில் பேசுகின்றோம். இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் ஒத்து வருகின்ற ஏதாவது கட்சிகளுடன் நாங்கள் கூட்டு வைத்துக் கொள்ளலாம். அது தமிழர்களாகவுமிருக்கலாம், முஸ்லிம்களாகவுமிருக்கலாம், அல்லது பௌத்த சமயத்தைச் சேர்ந்தவர்களாகமிருக்கலாம்.
ஏனெனில் நிறைய இடதுசாரிக் கட்சிகள் இன்று முஸ்லிம் காங்கிரஸின் அடிப்படைக் கொள்கைகளை ஆதரிக்கும் கட்சிகளாகவுள்ளன. அவ்வாறான, கொள்கை அடிப்படையிலான கூட்டைத்தான் நாம் எதிர்காலத்தில் சிந்திப்போம்.
கேள்வி: மாகாண சபைகளுக்கு எக்காரணம் கொண்டு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாதென ஜனாதிபதி கூறியிருக்கிறாரே?
பதில்: பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் என்பன வழங்கப்படாமையால் வடக்கு, கிழக்கிலுள்ள சிறுபான்மைச் சமூகங்கள் தங்களது காணிகளை இழந்துள்ளமையைக் குறிப்பிட்டுக் கூறலாம்.
மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் காணிகள் தொடர்பில் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அந்தத் தீர்ப்புகளைச் செயல்படுத்துவதற்கு மாகாண பொலிஸ் அதிகாரமின்மையால் அவ்விடயம் அரைகுறையாகவேயுள்ளது. முடியாத நிலைமையுமுள்ளது.
காணி, பொலிஸ் அதிகாரம் வழங்குவது தொடர்பான முடிவை, ஜனாதிபதி தமது அதிகாரத்தை மட்டும் வைத்து எடுக்காமல், தன்னுடைய இதயத்தைத் தொட்டு எடுக்கும் முடிவாக மேற்கொள்ள வேண்டும்.
அதிகாரமிருக்கிறது என்பதற்காக இந்த விடயத்தில் ஏதேச்சாதிகாரமாக முடிவெடுக்கக்கூடாது.
மக்கள் தமது உரிமைகைளை, தேவைகளைத் தாமே நிறைவேற்றிக் கொள்ளத்தக்க மனிதாபிமான தீர்மானத்தை இந்த விடயத்தில் ஜனாதிபதி எடுக்க வேண்டும்.
கேள்வி : யுத்த காலத்தில் இருந்ததை விடவும் இன்றைய சமாதானம் ஏற்பட்ட பின்னர் கிழக்கில் முஸ்லிம்களின் காணிகள் பெருமளவில் பறிபோயுள்ளன அல்லது பறிக்கப்பட்டுள்ளன. இது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில் : கிழக்கிலுள்ள முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள் பற்றி நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றக் குழுக்கூட்டங்களிலும் பல தடவைகள் நானும் பேசியுள்ளேன். அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த போன்ற பல அமைச்சர்கள் பங்குகொண்ட – காணிப் பிரச்சினைகள் தொடர்பான – பெரிய கூட்டமொன்று திருமலையில் நடந்தது.
அதேபோல் காணி அமைச்சர் பொத்துவிலுக்கு வந்து இத்தகைய கூட்டங்களை நடத்தியுள்ளார். மாவட்ட செயலகங்களிலும் பல கூட்டங்கள் நடத்தப்பட்டு இதுபற்றி ஆராயப்பட்டுள்ளது.
ஆனால் இக்கூட்டங்களிலெல்லாம் முடிவுகள் எடுக்கப்படும் ஆனால் அந்த முடிவுகள் நடைமுறைப்படுத்தப்படுவதான சரித்திரம்தானில்லை. இது, எனக்கு இன்னும் புரியாத புதிராகவே இருந்து வருகின்றது.
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் இக்காணிப் பிரச்சினைகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தில் இனவாதப் போக்கு ஒன்று இருப்பதாகவே முஸ்லிம் மக்கள் பேசிக்கொள்கின்றனர். உதாரணமாக பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில், யுத்தம் முடிவடைந்த பின்னர் வன இலாகாவினர் ஹெலிக்கொப்டரில் சென்று காடுகளாகத் தெரிந்த இடங்களை எல்லாம் பார்வையிட்டு, அவற்றை வன இலாகாவுக்குச் சொந்தமானவை என வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனம் செய்துள்ளனர்.
எந்த படிமுறைகளும் செய்யப்படாமல் – பொத்துவில் பிரதேச செயலாளருக்கே தெரியாமல் – இந்த விடயம் கையாளப்பட்டுள்ளது. இவ்வாறு பல்லாயிரக் கணக்கான மக்களின் காணிகள் பறிக்கப்பட்டுள்ளன
கேள்வி: வடக்கிலும் காணிப் பிரச்சினைகள் தொடர்கதையாகவேயுள்ளன. இவற்றுடன் ஒப்பீட்டளவில் கிழக்கு முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளை எவ்வாறு நோக்குகின்றீர்கள்?
பதில்: குறிப்பாகச் சொல்லப்போனால் வடக்கு மக்களுக்கும் கிழக்கு மக்களுக்கும் ஒரே பிரச்சினைகள்தான். அங்கு இராணுவத்தால் அஷ்ரப் நகரென்ற முஸ்லிம் கிராமமே அகற்றப்பட்டுள்ளது.
செங்காமம் போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்களின் காணிகளை இராணுவத்தினர் பறித்தெடுத்துள்ளனர். பிரச்சினை என்னவென்றால் தமிழ் மக்கள் இந்த விடயங்களுக்கெதிராக உணர்வுபூர்வமாக ஒற்றுமைப்பட்டுள்ளனர்.
திடமான நடவடிக்கைகளை அவர்கள் நடைமுறைப்படுத்துகின்றனர். இந்த நிலை முஸ்லிம்களுக்கு மத்தியில் இல்லை. கூறுகூறாகப் பிரிந்து, முரணான நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் கூட்டு முயற்சியின்றி பிரச்சினைகள் நீண்டு வருகின்றன.
கேள்வி: முஸ்லிம்களும், தமிழர்களும், மலையகத்தவர்களும் ஒற்றுமைப்பட்டு எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென்ற குரலை பஷீர் சேகுதாவூத் எழுப்பியுள்ளாரே?
பதில்: யாழ்ப்பாணத்தில் நடந்த ஈ.பி.ஆர்.எல்.எவ். மாநாட்டில் நான் இதைப் பற்றியே பேசினேன். நமது பிரச்சினைகளை எல்லாம் ஒன்றாகவேயுள்ளன. ஆனால் ஏதோ ஓரு சிறிய நூல்வேலி நம்மைப் பிரித்துக் கொண்டிருக்கின்றது.
அந்த நூல் வேலியை நாம் அகற்றவேண்டும். பரஸ்பரம் நமது சமூகங்களின் அபிலாஷைகள், எதிர்பார்ப்புகளை நாம் பூரணமாக அங்கீகரிக்கவேண்டும்.
குறிப்பாக தமிழ், முஸ்லிம் சமூகங்கள் பரஸ்பரம் ஒருவரையொருவர் அங்கீகரிக்கும் சமூகங்களாக இருந்தால் மட்டும்தான் நமது பிரதேசங்களை எவ்வித ஊடுருவலுமின்றிப் பாதுகாக்கலாம்.
ஆக, நமது இனப் பரம்பலையும் எம் நிலங்களையும் எக்காரணம் கொண்டும் நாம் பறிகொடுக்க முடியாது.
கேள்வி: கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை அரசுடன் செய்த ஒப்பந்தப்படி முஸ்லிம் காங்கிரஸ் உரிய காலத்தில் பெற்றுக்கொள்ளுமா என்பது பற்றி விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றனவே?
பதில்: கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிந்ததும், அரசுடன் நாம் அப்படியொரு ஒப்பந்தம் செய்துகொண்டமை உண்மையே. ஆனால், அந்த ஒப்பந்தத்தில் முதலமைச்சர் விடயம் மட்டுமல்ல, பல விடயங்களுள்ளன. அதில் கரையோர மாவட்டக் கோரிக்கையுள்ளது.
அதை உடனடியாகத் தரமுடியாவிட்டால், உடனடியாக மேலதிக மாவட்டச் செயலாளர் பணிமனை ஒன்று திறக்கப்படவேண்டுமென்றும் கோரியுள்ளோம். ஏற்றுக்கொண்டார்கள்.
ஆனால் என்னைப் பொறுத்தவரை முதலமைச்சர் பதவியென்பதை விடவும், கரையோர மாவட்ட விடயமே முதன்மைப்படுத்தப்படவேண்டும். தற்போதைய அரசியல் சூழலில் முதலமைச்சர் பதவியைப் பெற்று எவ்வித சாதனையையும் சாதித்து விடமுடியாது.
வெறும் பதவியாகவே அது இருக்கும்; சமூகத்திற்குக் கிடைத்த ஒரு கௌரவமாக அப்பதவி இருக்கலாம்; அது தனிமனிதனுக்கு முடிசூட்டும் விடயமாகவேயிருக்கும்.
இதை விடக் கரையோர மாவட்டம் கிடைத்தால் அது அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம்களுக்கு முடிசூட்டும் விடயமாக, மக்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் நிறைவு செய்யத்தக்கதாகவும் அமையும்.
ஆனாலும் இதற்காக கிழக்கு முதலமைச்சர் பதவி தேவையில்லை என்றும் கூற வரவில்லை. கிழக்கு மாகாண சபைத் தேர்தலின்போது முஸ்லிம் காங்கிரஸுக்குக் கிடைத்த பெரு வெற்றி, அதாவது கிழக்கிலுள்ள நான்கு முஸ்லிம் தேர்தல் தொகுதிகளையும் முதன்முதலாக நாங்கள் வென்றெடுத்தோம்.
அந்த வெற்றியை மறந்துவிட முடியாது. முஸ்லிம் மக்கள் இந்த வெற்றியைப் பெரிய எதிர்ப்பார்ப்புடன் தான் தந்தனர். இதற்குப் பிரதி உபகாரம் நாம் செய்யவில்லை என்ற உணர்வே எனக்கு மேலிடுகின்றது.
இதற்கு முன்னர் செய்த ஒப்பந்தங்களை விட மிக வலுவான ஒப்பந்தமாகவே கிழக்கு ஆட்சி அமைப்பின்போது முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் செய்து கொண்டது. முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் முக்கியமான கிழக்கு மாகாணத்துடன் – சம்பந்தப்பட்ட விடயம் இது. இந்த ஒப்பந்தத்தை மீறினால் அல்லது கணக்கெடுக்காவிட்டால் திரும்பவும் நாம் மக்களிடம் செல்லும் போது அதன் வினை பிரதிபலிக்கும்.
எம்மை மக்கள் நிராகரிக்கும் நிலைமையும் வரும். இதற்கு இடம் வைக்க முடியாது.
இந்த நிலையில் யாராவது ஒப்பந்தம் செய்துவிட்டு, அதை பின்னர் தரமாட்டோமென சொன்னால் அதன் பிறகும் அவர்களுடன் நெருங்கியிருப்பது வெட்கம் கெட்ட செயலாகவே இருக்கும்.
கிழக்கு ஆட்சியமைப்பில் செய்து கொண்ட ஒப்பந்தமானாலும் நிலைமை அதுதான். முஸ்லிம் சமூகம் உணர்விழந்த ஒரு சமூகமல்ல. கபடத்தனமான சிந்தனையுடன் அரசு முஸ்லிம் காங்கிரஸை அணுகக்கூடாது.
அவ்வாறான நிலை வந்தால் பிரதிபலன்களை அரசு அனுபவிக்க வேண்டி வரும்.
கேள்வி: இறுதியாக அளுத்தம, பேருவளை சம்பவங்கள் பற்றி.?
பதில்: சம்பவம் நடப்பதற்கு முதல் பொதுபல சேனவின் ஞானசாரதேரர் ஆற்றிய உரை பாரதூரமானது. “எல்லாரும் புறப்பட்டு வாருங்கள்; போவோம், அடிப்போம், உடைப்போம், பயப்பட வேண்டாம், எல்லாம் பௌத்த இராணுவம்” – இந்தளவுக்கு அவர் பேசிய பேச்சை அரசு கண்டுகொள்ளாமலுள்ளது.
இவ்வளவு பெரிய அனர்த்தமும் நடந்தது இந்தப் பேச்சு மூலமாக சிங்கள மக்களைத் தூண்டிவிட்டமையால்தான். ஓர் இனத்தின் மீது வீண் பழி சுமத்தும் சம்பவமாக அரசு இதனைப் பார்க்கவில்லை. இதனால்தான் முஸ்லிம்கள் இன்று அரசு மீது வெறுப்புக் கொண்டுள்ளனர்.

Post a Comment