ஊவா மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஈட்டும் அமோக வெற்றியுடன் அரசாங்கத்தின் வெற்றிகரமான பயணம் மேலும் சக்திபெறும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
மொனராகலை மடுல்ல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி: அரசாங்கம் மாகாண சபையையும் பிரதேசசபையும் இணைத்துக் கொண்டு முன்செல்லும் பலமான பயணத்திற்கு மக்களின் முழுமையான ஆதரவு உண்டு என்ற நம்பிக்கை தமக்குள்ளது எனவும் தெரிவித்தார்.
இந்த வருடத்திற்குள் நாட்டில் அனைத்து மக்களுக்கும் மின்சாரம் என்ற இலக்கை வெற்றிகொண்டு அடுத்து அனைவருக்கும் சுத்தமான குடிநீர் என்ற இலக்கையும் வெற்றிகொள்வோம். எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மொனராகலை மாவட்டத்தில் மடுல்ல பல் தொகுதி வர்த்தக நிலையம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டு மக்கள் உபயோகத்துக்குக் கையளிக்கப்பட்டது.
சுமேதா ஜயசேன, எஸ். எம். சந்ரசேன, விஜித் விஜயமுனி சொய்சா, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பீலிக்ஸ் பெரேரா உட்பட அமைச்சர்கள், ஊவா முன்னாள் முதலமைச்சர் சiந்திர ராஜபக்ஷ வட மத்திய மாகாண முதலமைச்சர் எஸ். எம். ரஞ்சித் உட்பட மாகாண அமைச்சர்கள் உறுப்பினர்கள், முக்கியஸ்தர்களுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்; ஊவா மக்கள் அதிக உரிமை உள்ள மக்கள் சுதந்திர போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் மக்களுக்குப் பாதுகாப்பளித்தவர்கள் இப்பிரதேச மக்களே. அதனால் சுதந்திரம் உரிமை தொடர்பில் வரலாற்று உரித்துடையவர்கள் என்ற பெருமை இப்பிரதேச மக்களுக்கு உள்ளது.
ஊவா மாகாணத்தில் குறிப்பாக மொனராகலை மாவட்டத்தின் அனைத்துப் பிரதேசங்களும் பாரிய அபிவிருத்தியடைந்துள்ளன. மக்கள் அதனைக் கண்டுணரக்கூடியதாகவுள்ளது. வீதிகள், பாடசாலைகள் ஆஸ்பத்திரிகள் என அனைத்துத் துறைகளும் முன்னேற்றமடைந்துள்ளன.
அதேபோன்று இப்பிரதேச விவசாயிகளின் உற்பத்திகளுக்கு சந்தைவாய்ப்பில்லாமல் இருந்த யுகமொன்று இருந்தது. மரக்கறி, எலுமிச்சை, வாழைபோன்ற உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கு நாம் சிறந்த சந்தை வாய்ப்பையும் விலையையும் பெற்றுக்கொடுத்துள்ளோம். தற்போது இது போன்ற சந்தைத் தொகுதிகளை நிர்மாணித்து உற்பத்திகளுக்கு வசதிவாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்து வருகிறோம்.
இப்பகுதியில் தற்போது வரட்சி நிலவுகிறது. இங்கு மட்டுமன்றி அயல் மாவட்டங்களிலும் மக்கள் வரட்சிக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளது. இந்த வரட்சியைக் கருத்தில் கொண்டு முழு ஊவா மாகாணத்திற்கும் நீர் வழங்கக் கூடிய பாரிய திட்டங்களை நாம் ஆரம்பித்துள்ளோம். நீர் உள்ள பிரதேசங்களுக்குள் நீரற்ற வரட்சிப் பிரதேசங்களுக்கு நீரைக் கொண்டு செல்லும் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உமா ஓய திட்டம் மற்றும் ஏனைய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் 100ற்கு 96 வீதமான மக்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுவிட்டது. ஒரு சில கிராமங்களுக்கு மட்டுமே மின்சாரம் விநியோகிக்ப்படாமலுள்ளன இந்த வருடத்தில் நூற்றுக்கு நூறுவீதம் மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் இலக்காகும்.
அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுத்கப்பட்டுள்ளதுடன் தேவையான பணிப்புரைகளையும் உரிய அமைச்சர்களுக்கு வழங்கியுள்ளேன்.
அடுத்து நாட்டில் அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். வடக்கில் பருத்தித்துறை முதல் தெற்கில் தேவேந்திர முனைவரை நாட்டில் அனைத்து மக்களுக்கும் வீட்டுக்கு வீடு குழாய்கள் மூலம் நீரை வழங்குவதே அரசாங்கத்தின் திட்டமாகும்.
எமது அயல் நாடான மாலைதீவில் கடல் நீர் சுத்திகரிக்கப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. எமது நாட்டிலும் கடல்நீரை சுத்திகரித்து மக்களுக்கு வழங்குவதன் மூலம் மக்கள் எதிர்நோக்கும் வரட்சியை தோற்கடிக்க முடியும் என்பதே எமது நம்பிக்கை. இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Post a Comment