இலங்கை அனைத்து மக்களுக்கும் தாய்நாடு. நமக்கென்று வேறுநாடுகள் எதுவும் கிடையாது. தமிழ் மக்களுக்கு எந்த நாடுகளும் தாயகம் அல்ல. எனவே அவர்களை எவரும் பொறுப்பேற்கவும் மாட்டார்களென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
வடக்கு, தெற்கு - தமிழ், சிங்களம் என்ற பேதம் எம்மிடமில்லை. நாம் அனைவரும் இந்த நாட்டில் பிறந்தவர்கள் என்ற வகையில் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தைப் பாதுகாத்து நாட்டையும் பாதுகாப்போம் என தெரிவித்த ஜனாதிபதி, தாய்நாட்டையும் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தையும் காட்டிக் கொடுக்காது கட்டிக் காத்து நாட்டை முன்னேற்றுவோம் என்றும் கேட்டுக் கொண்டார். மொனராகலை பாலாறு விபுலானந்த தமிழ் மகா வித்தியால யத்திற்கான மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வுகூடம் நேற்று ஜனாதிபதியினால் உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலை மாணவிகளின் பல்வேறு கலை கலாசார அம்சங்களுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மஹிந்தோதய விஞ்ஞான தொழில்நுட்ப வித்தியாலயத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
“மொனராகலை பாலாறு விபுலானந்த தமிழ் வித்தியாலயத்திற்கு வருகை தந்து இங்கு மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடமொன்றை திறந்து வைப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் மஹிந்தோதய ஆய்வு கூடங்களைத் திறந்து வைத்துவிட்டு இங்கு தமிழ் பாடசாலையிலும் அதேபோன்ற மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடத்தைத் திறந்து வைப்பது எமக்கு மகிழ்ச்சி.
வடக்கைப் போன்றே தென்பகுதியிலும் தமிழ் பாடசாலைகளை முன்னேற்றுவது எமது நோக்கமாகும். பிள்ளைகளே! நீங்களே இந்த நாட்டின் எதிர்காலம். இந்த நாட்டின் சிறந்த செல்வங்கள். நீங்கள் அனைவரும் சிறப்பாக முன்னேற வேண்டும். படித்தால் மட்டும் போதாது சிறந்த குண நலன்களைக் கொண்டிருப்பது முக்கியம்.
இந்த வாரத்தில் மாத்திரம் நாம் பல மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடங்களைத் திறந்து வைத்துள்ளோம். இது பெற்றோர்களுக்கல்ல. எமது எதிர்கால சந்ததியர்களான பிள்ளைகளுக்கானது. இந்த நாட்டில் மட்டுமின்றி உலகை வெல்லக்கூடிய மாணவர்களாக உங்களை காண்பதே எமது எதிர்பார்ப்பு.
தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பேதம் எம்மிடம் கிடையாது. நாம் அனைவரும் இலங்கையில் பிறந்தவர்கள். தமிழ் மக்களே நீங்களும் இந்த நாட்டில் பிறந்தவர்கள் தானே? வெளிநாட்டில் பிறக்கவில்லையே! இதுதான் நம் எல்லோருக்குமான நாடு. எமக்கு வேறு நாடு கிடையாது.
வேறு நாடுகள் தமிழ் மக்களைப் பாரமெடுக்கப் போவதுமில்லை. அதனை மனதிற்கொண்டு நாம் பிறந்த இந்த தாய்த் திருநாட்டை நாம் அனைவரும் இணைந்து பாதுகாக்க வேண்டும். அதற்காக பொறுப்பும் அனைவருக்கும் உள்ளது.
இதனை கருத்திற் கொண்டே அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த கல்வியைப் பெற்றுக் கொடுப்பதை நாம் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளோம். பிள்ளைகள் ஒழுங்காக கல்வியைக் கற்று முன்னேற அவர்களை தயார்படுத்துவது பெற்றோர்கள் ஆசிரியர்களே.
Post a Comment