BREAKING NEWS

ஊவா மாகாண சபைத் தேர்தலில் இவர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும்.

ஊவா மாகாண தேர்தல் களை கட்டியுள்ள இவ்வேளை உங்களின் பெறுமதியான வாக்குகளை கொள்ளையடித்து சூறையாட அரசியல்வாதிகள் பலரும் உங்களை சுற்றி வலம் வருகின்றனர். இவர்கள் கூரைத்தகரங்கள் தருவதாகவும் தொழில் வாய்ப்புகளுக்கான விண்ணப்ப படிவங்கள் பகிர்ந்தளித்து ஏமாற்று வித்தையினை மீண்டும் இம் மாகாணத்தில் ஆரம்பித்துள்ளனர். இவர்களின் பொய் வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் என ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திஸாநாயக தெரிவித்தார்.

 
பண்டாரவளை நகர மத்தியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்;
 
பதுளை மாவட்டத்தில் சுமார் 8 இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் அதிகமானவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.  நிதி அமைச்சின் அறிக்கையின்படி தொடர்ச்சியாக பல வருட காலமாக நாட்டின் வறுமை கோட்டின் கீழ் வாழும் பிரதேசமாக இம்மாகாணம் மாறி வருகின்றது. எனவே, அரசின் ஆச்சரியமிக்க நாடான இலங்கையில் வறுமை தங்க கிண்ணத்தினை வென்றிருப்பதும் இம் மாகாணமே ஆகும். அரசு வறுமையினை ஒழிக்கும் எழுச்சியடையும் ஊவா வெல்லஸ்ஸ திட்டத்தினை முன்னெடுத்த போதிலும் அவை பேரளவில் மாத்திரம் செயற்பட்டதால் வறுமையின் கோரப்பிடியில் இருந்து  இம்மாகாண மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
 
கடந்த 30 வருட காலமாக இடம்பெற்ற யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடகிழக்கினையும் விட மிக வறுமைக்கோட்டில் வாழும் பிரதேசமாக  இம்மாகாணம் உள்ளது. இதற்கு யார் பொறுப்பு? அரசே பொறுப்பு  கூறியாக வேண்டும். இன்று  வெலிமடை பிரதேசத்தில் விளையும் மரக்கறிகளுக்கு ஒழுங்கான விலை கிடைக்கவில்லையானால் நெல் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவு அதிகரிக்குமானால் அறுவடையின் போது தகுந்த விலை கிடைக்கவில்லையானால் தோட்டத்தொழிலாளர்களுக்கு தகுந்த வேதனம் கிடைக்கவில்லையானால் சரியான வேலை நாள் கிடைக்கவில்லையானால், எங்கே வறுமையின் பிடியில் இருந்து மீள்வர். தோட்டங்களில் வாழும் ஏழை தோட்டத்தொழிலாளர்கள் தொண்டமான் உள்ளிட்ட முதலாளித்துவ தலைவர்களின் ஆட்சியில் சிக்கி மிகவும் கவலைக்கிடமான முறையில் போசாக்கின்மை, இரத்தசோகை போன்ற நோய்களில் சிக்கியுள்ள அதே வேளை கல்வி மற்றும் சுகாதார சேவைகளில் பாதிப்புற்றுள்ளனர். தமக்கு சொந்தமான வீடோ காணியோ உரிமையோ இல்லாது கடந்த 180 ஆண்டை லய அறைக்குள் இருந்து கழித்துள்ளனர். இவர்களின் வாக்குகளை சூறையாடி மலையக தலைமைகள் அரசாங்கத்துக்கு இம் மக்களை அடகு வைத்துள்ளனர். இதனை தோட்ட மக்கள் நன்கு  உணர்ந்து செயற்பட வேண்டிய தருணம் இதுவாகும். எனவே எதிர்வரும் ஊவா மாகாண சபைத் தேர்தலில் இவர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும். 

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar