தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உலமா கட்சித்தலைவருடன் பேச்சு வார்த்தையை முடித்திருப்பதாகவும் தேசிய பட்டியல் மற்றும் பெருந்தொகை பணம் பெற்று எதிர் வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் என்ற இணையத்தளத்தில் வெளிவந்த செய்தி
அப்பட்டமான பொய்யாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது,
இன்றிருக்கும் சூழ் நிலையில் சிங்கள பேரினவாதத்திலிருந்து தென் மாகாண முஸ்லிம்களை பாதுகாப்பதாயின் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஜனநாயக ரீதியாக ஒப்பந்த அரசியலூடாக கிழக்கில் ஒன்று பட வேண்டும் என்பதில் உலமா கட்சியிடம் மாற்றுக்கருத்து இல்லை. அதே போல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்வது ஒரு காலை அரசாங்கத்தில் வைத்துக்கொண்டு இன்னொரு காலை தமிழ் கூட்டமைப்புடன் வைத்துக்கொள்ளும் பச்சோந்தி, ஏமாற்று அரசியல் உலமா கட்சியிடம் ஒரு போதும் இல்லை. அந்த வகையில் தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்காக உலமா கட்சியும் தமிழ் கூட்டமைப்பும் இணைந்து எதிர் காலத்தில் பேச்சுவார்த்தையில் ஈடு படுவது என்பதில் மட்டும் த. கூட்டமைப்பின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் உலமா கட்சியின் தலைமையும் இணக்கப்பாட்டை எட்டியுள்ளது. ஆனாலும் அது சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை.
இந்த நிலையில் உலமா கட்சியின் வெற்றியை நோக்கிய பயணத்தை பொறுக்க முடியாதோர் அக்கட்சி பற்றிய பொய்களை அவிழ்த்து விடுவதை வண்மையாக கண்டிக்கிறோம். அதே வேளை உலமா கட்சி; த. கூட்டமைப்புடன் இணைய வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் அக்கட்சியின் தேசிய பட்டியலை பெற வேண்டிய நிலையும் ஏற்பட்டால் முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சிக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் செய்தது போன்று நம்பிக்கை துரோகத்தை உலமா கட்சி செய்யாது என்பதை உறுதியாக கூறுகிறோம். உலமா கட்சி ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்று வரை அக்கட்சி தனது அத்தனை அரசியல் வழிகாட்டலையும் இஸ்லாமிய வழி காட்டலுக்குள் நின்றே செய்து வருகிறது. அந்த வகையில் உண்மை நேர்மை வாய்மை என்ற இஸ்லாமிய அரசியலுக்குள் நின்றவாறே த. கூட்டமைப்புடன் உலமா கட்சி பேசுமே தவிர முஸ்லிம் சமூகத்துக்கு பாதகமான எந்த விடயத்தையும் ஏற்றுக்கொள்ளாது. அத்துடன் தனிப்பட்ட நலனை விடுத்து முஸ்லிம் தமிழ் சமூகங்களின் நலனுக்கே முக்கியத்துவமளிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆகவே த. கூட்டமைப்புடன் தேசிய பட்டியல் மற்றும் பணம் என்பவற்றில் உலமா கட்சித்தலைவர் உடன்பாடு கண்டுள்ளதாக வெளிவந்த செய்திகள் வெறும் ஊகமும் பொய்யுமாகும் என தெரிவிப்பதுடன் இவ்வாறான பொய்யான சலசலப்புக்களுக்கு உலமா கட்சி அஞ்சாது என்பதையும் சொல்லி வைக்கிறோம்.
Post a Comment