BREAKING NEWS

கட்சி மாறும் உறுப்பினர்களின் அங்கத்துவம் இழப்பு; முஸ்லிம் காங்கிரசுக்கு ஆப்பு வரலாம்.

தேசிய நிறைவேற்றுப் பேரவை ஆராய்வு!


download

கட்சி மாறும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி அங்கத்துவத்தை இழக்கச் செய்யும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் தேசிய ஆலோசனை நிறைவேற்றுப் பேரவை ஆராய்ந்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் அரசியலமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட தேசிய ஆலோசனை நிறைவேற்றுப் பேரவையின் மூன்றாவது கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று திங்கட்கிழமை மாலை அலறி மாளிகையில் நடைபெற்றபோதே இது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முதல்வருமான சட்ட முதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் ஆர்.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.சுமந்திரன், ஜே.வி.பி.தலைவர் அனுரகுமார திசாநாயக்க, ஜாதிக ஹெல உறுமய சார்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, ஜனநாயக கட்சித் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா, நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, உள்ளிட்ட பலரும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்தின் முக்கிய அம்சமான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் மாற்றம் செய்து நல்லாட்சியை உறுதிப்படுத்துவது தொடர்பிலும் அரசியலமைப்பில் மற்றும் பல சீர்திருத்தங்களை மேற்கொள்வது குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதியின் ஆயுட்காலத்தை ஐந்து வருடங்களாக மட்டுப்படுத்துவது தொடர்பிலும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் நான்கு வருட நிறைவுக்கு முன்னதாக பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு இல்லாமல் செய்வது என்றும் அவ்வாறு குறித்த காலத்திற்கு முன்னதாக பாராளுமன்றத்தை கலைக்க வேண்டுமாயின் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் எனும் சரத்தை உள்ளடக்குவது என்றும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இன்று கலந்துரையாடப்பட்ட விடயங்களை எதிர்வரும் வியாழக்கிழமை முழுமைப்படுத்தி உறுதியான தீர்மானங்களை மேற்கொள்வது என்றும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
தேசிய ஆலோசனை நிறைவேற்றுப் பேரவை கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அனைத்து கட்சிகளினதும் தலைவர்களின் பங்கேற்புடன் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டமையும் அதன் இரண்டாவது கூட்டம் மறுநாள் வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில் தலைமையில் இடம்பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது
கட்சி விட்டு கட்சி மாறுவதில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும் அதன் உறுப்பினர்களுமே அதிகம் ஈடுபடுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar