ஜே. வி. பி. குற்றச்சாட்டு
இலஞ்ச ஊழல் மோசடி தொடர்பில் 12 பேருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் பற்றி ஆரம்பகட்ட விசாரணைகளை ஆரம்பித்து இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தன்மீதான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என ஜே.வி.பி கேட்டுக்கொண்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. பசில் ராஜபக்ஷ, கோட்டபாய ராஜபக்ஷ, அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக ஜே.வி.பி. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவில் முறைப்பாடு செய்திருந்தது. இந்த முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் நேற்று நடைபெற்றன. இதில் மேலதிக தகவல்களை வழங்குவதற்காக ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத், மற்றும் சட்டத்தரணிகள் நேற்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்குச் சென்றிருந்தனர்.
இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த விஜித ஹேரத், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளில் எமக்கு பூரண நம்பிக்கை இல்லை. நாம் முன்வைத்த முறைப்பாடுகள் தொடர்பில் அவர்கள் எவ்வளவு தூரம் விசாரணை செய்திருக்கிறார்கள் என்பதை தெரியப்படுத்துமாறு நாம் கோரினோம். எனினும் திருப்தியடையக் கூடிய பதில் எதுவும் எமக்குக் கிடைத்திருக்கவில்லை.
எனவே, நாம் முறைப்பாடு செய்த 12 பேருக்கு எதிரான ஆரம்பகட்ட விசாரணைகளை தொடங்கி ஆணைக்குழு மீதான நம்பிக்கையொன்றை ஏற்படுத்து மாறும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் கேட்டுள்ளோம். நம்பிக்கையை ஏற்படுத்திய பின்னர் இவர்கள் தொடர்பான மேலதிக விபரங்களை வழங்கமுடியும் என ஆணைக்குழுவிடம் நாம் கூறியுள்ளோம்.
ஏனெனில், நாம் வழங்கும் தகவல்களைப் பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்கி விசாரணைகளை அவர்களைப் பாதுகாப்பதற்கு ஆணைக்குழு முயற்சிக்கின்றதோ என்ற சந்தேகம் எமக்கு உள்ளது. இதுவரை இரண்டு பேருக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பில் முழுமையான தகவல்களை வழங்கியுள்ளோம். ஏனையவர்கள் பற்றிய விபரங்களும் எம்மிடம் உள்ளன. ஆணைக்குழு விசாரணைகளில் நம்பிக்கை தன்மையை வெளிக்காட்டினாலேயே அவற்றை வழங்க முடியும்.
நாம் முறைப்பாடு செய்தவர்களின் சொத்து விபரங்களைக் கூட ஆணைக்குழு இதுவரை கோரவில்லை. இதுவரை ஆணைக்குழுவின் விசாரணை செயற்பாடுகள் திருப்திஅடையும் வகையில் அமைந்திருக்கவில்லை.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் ஊடாக இந்த விடயங்களை தீர்ப்பதற்கே யோசிக்கின்றோம். முடியாது போனால் புதிய அரசியலமை ப்பின் ஊடாக புதியதொரு நிறுவனத்தை ஸ்தாபித்து அதனூடாக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டி ஏற்படும் என்றும் விஜித ஹேரத் தெரிவித்தார்.
Post a Comment