வாடகைக்கு கப்பல் பெறப்பட்டதில் அரசுக்கு 3-1/2 கோடி ரூபா நட்டம்
பெற்றோலியக் கைத்தொழில் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி செயலாளருமான அநுர பிரியதர்சன யாப்பா நேற்று பொலிஸ் விசேட விசாரணை பிரிவினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதனூடாக அரசாங்கத்திற்கு மூன்றரை கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டதாக முறையிடப்பட்டிருந்தது. இது தொடர்பில் வாக்கு மூலம் பெறுவதற்காக முன்னாள் பெற்றோலியக் கைத்தொழில் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா நேற்றுக் காலை பொலிஸ் விசேட விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட் டிருந்தார். முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பாவுக்கு எதிரான விசாரணை காலை 10.30 மணிமுதல் பிற்பகல் 1.15 மணி வரை சுமார் 3 மணி நேரம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
2014 ஜூலை மாதத்தில் கப்பல்களில் இருந்து எரிபொருள் இறக்கப் பயன்படுத்தும் மிதவை பழுதடைந்ததால் இதற்காக சிறியரக கப்பல் வாடகைக்கு அமர்த்தப்பட்டது. உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் இந்த சிறிய கப்பல் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளதோடு இந்த சிறியரக கப்பலை பயன்படுத்தியும் எரிபொருள் இறக்குமதி நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் போயுள்ளது.
இதனால் அந்த சிறிய கப்பலை திருப்பி அனுப்ப நேரிட்டுள்ள அதே வேளை அதற்கு தேவையான எரிபொருளும் வழங்க நேரிட்டுள்ளது.
இந்த விடயம் இடம்பெற்றவேளை அநுர பிரியதர்சன யாப்பாவே பெற்றோலிய கைத்தொழில் அமைச்சராக பணிபுரிந்துள்ளதோடு இது குறித்தே பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். தேவையேற்பட்டால் அவர் மீண்டும் விசாரணைக்குட்படுத்தப்பட இருப்பதாக கூறிய அவர் பெற்றோலியக் கூட்டுத்தாபன மற்றும் அமைச்சு உயரதிகாரிகளும் விசாரணை செய்யப்பட இருப்பதாக குறிப்பிட்டார்.
Post a Comment