நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதியிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்புக்கு கேலியாக பதிலளித்து அசடுவழிந்த சம்பவமொன்று கடந்தவாரம் நடைபெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தேவையொன்றின் நிமித்தம் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி கூட்டமொன்றில் கலந்து கொண்டிருக்கும் காரணத்தினால், சற்று நேரம் கழித்து ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி அழைப்பு குறித்த தகவலை ஜனாதிபதியிடம் கூறுவதாக அவரது பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.
எனினும் அன்று மாலை வரை காத்திருந்த ரஞ்சன், ஜனாதிபதியின் அழைப்பு வராத நிலையில் உடல் களைப்பினால் நேர காலத்துடன் தூங்கச் சென்றுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு தாண்டிய நிலையில் பிரைவேட் நம்பர் என்று மின்னிட்ட தொலைபேசி அழைப்பொன்று அவருக்கு வந்துள்ளது.
பெரும்பாலும் வெளிநாடுகளில் இருக்கும் ரஞ்சனின் நண்பர்களின் அழைப்பு வரும்போதும் அவ்வாறு பிரைவேட் நம்பர் என்று பளிச்சிடுவதால் அதுவும் அவ்வாறான தொலைபேசி அழைப்பாக இருக்கலாம் என்று முதல் தடவை அழைப்பை புறக்கணித்துள்ளார்.
இரண்டாவது தடவையாகவும் தொலைபேசி அழைத்த நிலையில் ரஞ்சன் பதிலளிக்க, ''ஹலோ, அமைச்சரே, நான் மைத்திரிபால பேசுகிறேன்'' என்ற குரல் செவிகளில் ஒலித்துள்ளது. நண்பர்கள் தான் கிண்டல் செய்வதாக நினைத்த ரஞ்சன், நீ எப்போது இருந்து மைத்திரிபால சிறிசேனவாக மாறினாய்? என்று ரஞ்சன் வினவியுள்ளார்.
மீண்டும் ஜனாதிபதி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோதும் ரஞ்சன் அதே பதிலையே கிண்டலுடன் அதே பதிலையே அளித்துள்ளார். அத்துடன் தொலைபேசி அழைப்பு கட் செய்யப்பட்டுள்ளது.
எனினும் தனக்கு வந்த அழைப்பு ஜனாதிபதியிடமிருந்து வந்த அழைப்பாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் அவர் மீண்டும் ஜனாதிபதியை தொடர்பு கொண்டுள்ளார். அதன்போது சற்று முன்னர் வந்த அழைப்பு உண்மையில் ஜனாதிபதியிடமிருந்து வந்த அழைப்புத் தான் என்பது தெளிவாகியுள்ளது.
அதனையடுத்து ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியிடம் நடந்ததைக் கூறி மன்னிப்புக் கோரியுள்ளார்.
அதற்கு பலமாக சிரித்த ஜனாதிபதி, நல்லவேளை நான் கட் செய்துவிட்டேன், இல்லாவிட்டால் கெட்ட வார்த்தைகள் தான் நான் கேட்டிருக்க நேரிடும் என்று சிரித்துள்ளார்.
அத்துடன் தான் தொடர்ச்சியாக கூட்டங்களில் உரையாற்ற நேர்ந்துள்ளதால், தனது குரல் மாறிப் போயிருப்பதன் காரணமாக ரஞ்சனுக்கு தன்னுடைய குரலை இனம் காண முடியாது போயிருக்கலாம் என்று கூறி அவரை ஆசுவாசப்படுத்தவும் செய்துள்ளார்.
Post a Comment