BREAKING NEWS

ஜம்மிய்யதுல் உலமாவின் நம்பகத் தன்மையில் சந்தேகத்தை உண்டாக்கின்ற பல நிகழ்ச்சிகள்


இலங்கை ஜமாஅதே இஸ்லாமி


இலங்கையில் ஜம்மிய்யதுல் உலமா சபை போன்ற பலமான அமைப்பு தேவை. ஆனால் ஜம்மிய்யதுல் உலமாவின் நம்பகத் தன்மையில் சந்தேகத்தை உண்டாக்கின்ற பல நிகழ்ச்சிகள் தொடராக இடம்பெற்று வருகிறது. பொதுவாக இஸ்லாமிய சட்டத்துறையின் வளர்ச்சி கட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டும். அதனை இஸ்லாம் தொடர்ந்து பாதுகாத்து வந்துள்ளது. அந்த வகையில் இஸ்லாம் கருத்து வேறுபாடுகள் கொள்வதற்குரிய எல்லைகளை வகுத்து, அந்த எல்லையில் நின்று கருத்து வேறுபாடு கொள்வதற்குரிய உரிமையையும் உலமாக்களுக்குக் கொடுத்து, அதற்கு மாற்றுக் கருத்து சொல்பவர்கள் பேண வேண்டிய ஒழுங்குகளையும் சொல்லிக் கொடுத்து, அதனூடாக இஸ்லாமிய சட்டங்கள் வளர்வதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது.
இந்தப் பின்னணியில் வரலாற்றில் உலமாக்கள் எப்போதும் சமூகத்தில் இஸ்லாம் பற்றிய கேள்விகள் மற்றும் சமூகத்தில் தோன்றிய எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை சொல்லும் போது ஷரீஆ சட்டங்களைப் பேணி, குர்ஆன் ஹதீஸ் வழிமுறைகளுக்கமைய வாழும் நாடு, காலப் பகுதி மற்றும் தீர்மானம் எப்படியான விளைவுகளைக் கொண்டுவரும் என்பதைப் பார்த்து முடிவுகளைச் சொல்லியிருக்கிறார்கள். இதனால் இஸ்லாம் எல்லாக் காலத்திலும் உயிர்ப்புடன் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.
வரலாற்றில் வித்தியாசமான கருத்துகள் வந்துள்ளன. இது சஹாபாக்களின் காலத்திலிருந்தே தொடர்ந்து வருகிறது. இதற்காக வேண்டி சஹாபாக்கள் மத்தியில் முரண்பாடு வராத அளவுக்கு இஸ்லாமிய தலைமைத்துவம் கருத்துரிமைகளைப் பாதுகாத்து வித்தியாசமான கருத்துக்களை சொல்வதற்கு அதற்கான ஆதாப்களையும் போட்டு இன்று வரையில் இஸ்லாம் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது.
தற்பொழுது நாம் வாழும் இந்தக் காலப்பகுதியில் இலங்கையில் தாருஷ் ஷஹாதா சான்று பகர்கின்ற சமூகத்தில் வாழ்கின்ற கருத்தில் கவனம் செலுத்தப் பட வேண்டும். எமது ஒவ்வொரு கருத்தும் நடவடிக்கைகளும் இந்த நாட்டிலுள்ள எல்லோராலும் பார்க்கப்படுகின்றன என்கின்ற சிந்தனை இஸ்லாத்தைப் பற்றி பேசுகின்ற அறிஞர்களுக்கு இருக்க வேண்டும். அதேபோன்று நாம் உம்மது வஹ்தஹ் ஒரே உம்மத் என்று பாதுகாக்க வேண்டிய தேவையும், ஹைர உம்மத் என்று பாதுகாக்கப்பட வேண்டிய தேவையும் எங்களுக்கு உள்ளது. இதெல்லாம் பாதுகாப்பதற்கு இந்தச் சுதந்திரம், உரிமையைக் கொடுப்பது இந்த உரிமையுடன் உலமாக் கள் கருத்துச் சொல்வது அதற்கு மாற்றுக் கருத்து சொல்பவர்களும் அதற்குரிய ஆதாபுகளை பேணிப் பேசுவது தொடர்ந்து விளக்கப்படுத்தப்பட வேண்டும்.
இந்த உரிமைகளைக் கொடுத்தே ஜம்இய்யதுல் உலமாவின் ஒற்றுமைப் பிரகடனம் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் ஜம்இய்யதுல் உலமாவின் ஒற்றுமைப் பிரகடனம் கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஜம்இய்யதுல் உலமா முஸ்லிம் சமூகத்திற்கு தலைமைத்துவத்தை கொடுக்கும் ஒரு நிறுவனம். ஆனால் ஜம்இய்யதுல் உலமாவின் ஒரு சில உலமாக்களின் செயற்பாடுகளும், அது தொடர்பில் உலமா சபை பேசாமல் இருக்கும் விடயங்களும் ஜம்இய்யதுல் உலமாவின் நம்பகத் தன்மையிலும் பக்கச் சார்பிலும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இது ஜம்இய்யதுல் உலமாவுக்கு அவ்வளவு நல்லதல்ல.
ஜம்இய்யதுல் உலமாவில் அங்கத்துவம் பெற்ற சில உலமாக்கள் நாட்டின் சுகாதாரத்துறைக்கு சவால் விடும் அளவுக்கு பெரும் கருத்துக்களைப் பேசினார்கள். இது இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கும் இஸ்லாத்திற்கும் அவப்பெயரை ஈட்டித் தரும் விடயமாக அமைந்தது. இது விடயம் தொடர்பில் உலமா சபைத் தலைமையகம் மற்றும் பிராந்திய உலமா சபை எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. ஆனால் தனது எல்லைக்குள் நின்று கருத்துச் சொல்லும் அறிஞருக்கு எதிராக பள்ளிவாசலில் மக்களைக் கூட்டி நடவடிக்கை எடுத்திருப்பது உலமா சபையின் நம்பகத்தன்மையில் களங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பக்கச் சார்பாக நடந்துகொண்டமையினால் அதன் நீதமான போக்கில் பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் கூறியது போன்று (ஜம்இய்யதுல் உலமா போன்ற அமைப்பு) நடுநிலையாக நிற்கக்கூடிய அறிஞர்களாலேயே இஸ்லாம் பாதுகாக்கப்படுகிறது என்ற கருத்துக்கு ஒப்பான வகையில் அமையப் பெற வேண்டும். இந்தப் பொறுப்பை ஜம்மிய்யதுல் உலமா எடுக்க வேண்டும். இப்படியான கருத்து வேறுபாடு வரும் போது இஸ்லாமிய வரையறைக்குள் பேசுகின்ற அறிஞர்களை ஒரு சபைக்கு அழைத்து அவர்களைப் பேச வைத்திருக்க வேண்டும். அந்த கருத்துகளில் மக்களை முடிவெடுக்கச் சொல்லியிருக்க வேண்டும். வரையறை பேணுவதன் நன்மையை மக்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்க முடியும்.
உஸ்தாத் மன்சூரின் கருத்தா மற்ற உலமாவின் கருத்தா என்பதை விட கருத்து சொல்லும் உரிமையை இஸ்லாம் வழங்கியிருக்கும் போது, இந்தக் கருத்துக்களுக்கான மாற்றுக் கருத்துச் சொல்லும் ஒழுங்குகளை இஸ்லாம் வழங்கியிருக்கும் போது, இவையனைத்தையும் ஏற்றுக் கொண்ட உலமா சபையின் ஒற்றுமைப் பிரகடனமும் இருக்கும்போது இதை மீறி நடப்பது ஆரோக்கியம் இல்லை. நாட் டில் இஸ்லாமிய அறிஞர்கள் இஸ்லாமிய வரையறைக்குள் நின்று கருத்துச் சொல்லும் உரிமை வழங்கப்பட வேண்டும். இதுவே இலங்கையில் இஸ்லாத்தை பாதுகாக்கும் விடயமாகும்.

Share this:

2 comments :

  1. இவ்வளவு காலம் நடந்தவைகளுக்கு உங்கள் SJI எங்கிருந்தது?நீங்ககளும் அவா்களுடன் சோ்துதானே கலம் இரங்கினீா்கள்,இப்போது இலையில் புளு குத்தும் போது கிலைக்கு வளியா?

    ReplyDelete
  2. இயக்கம் வழா்பதை ஹைர உம்மத்தாக அல்லாஹ் சொல்ல வில்லை அல்குா்ஆனை தெளிவாக கற்றால்் புாியும்!

    ReplyDelete

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar