BREAKING NEWS

மாகாண‌ ச‌பை முறைமை ர‌த்தாக‌லாம். உல‌மா க‌ட்சியின் நீண்ட‌கால‌ கோரிக்கை.

இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் 13ஆவது திருத்த சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள மாகாண சபை முறைமையை முடிவுக்கு கொண்டு வரவும், புதிய அரசியலமைப்பின் ஊடாக அனைத்து இன மக்களுக்கும் சமமான உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டார். சுமார் 37 வருடகாலமாக நடைமுறையில் உள்ள மாகாண சபை முறைமையால் நாட்டிற்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ எவ்விதமான பலனும் இதுவரையில் கிடைக்கவில்லை. மாறாக இலங்கையில் அநாவசியமான பிரச்சினைகளை தோற்றவிக்கும் வகையிலான நிலைமையே காணப்படுகிறது. எனவே சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் பிரச்சினைகளை தோற்றவிக்காத வகையிலான அரசியல் ரீதியிலான தீர்வுத்திட்டத்தை எமது அரசாங்கம் முன்வைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெளிவுப்படுத்துகையில், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்துவதாக கூறிய இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை ஆரம்பகாலத்தில் இருந்தே நாங்கள் எதிர்த்து வந்துள்ளோம். நாட்டு மக்களின் விருப்பத்துக்கு மாறாகவும் அமைச்சரவையில் கூட அனுமதி பெறாமலுமே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இருப்பினும் அந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் அரசியலமைப்பின் ஊடாக நாட்டில் நடைமறைப்படுத்தப்பட்டுள்ள 13ஆவது திருத்தத்தின் அடிப்படையிலான மாகாண சபை முறைமையால் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை. மாறாக இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையிலான சூழலே காணப்படுகிறது. எனவே பயனற்ற மாகாண சபை முறைமைக்கு பதிலாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேறக்கூடியதும் அனைத்து இன மக்களுக்கும் சமமாக உரிமையை பெற்றக்கொள்ளும் வகையிலுமான புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயல்படுகின்றது. இதற்காக இலங்கையில் உள்ள அனைத்து தரப்பினர்களினதும் கருத்துக்கள் கேட்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்து குறுகிய காலங்களே ஆகின்ற நிலையில், நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதில் முன்னுரிமை அளித்து செயல்பட்டாலும், நிரந்தர தீர்வுகளுக்கான பல நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றோம். நடைமுறையில் உள்ள பழைமைவாய்ந்த அரசியலமைப்பிற்கு பதிலாக புதிய அரசியலமைப்பு உருவாக்குவது முக்கிய பொறுப்பாக நாங்கள் கருதுகின்றோம். புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு கிடைக்கம். அப்போது 13ஆவது அரசியலமைப்பு திருத்தமோ அல்லது மாகாண சபை முறைமைக்கான தேவையோ நாட்டில் இருக்காது என்றார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by OddThemes - Videopiar