BREAKING NEWS

அறிவியலுக்குத் தடையாய் நின்ற மதம்!

மாந்தர்களாகிய நாம் வாழ்ந்துவரும் இந்தப் புவியானது சூரியக் குடும்பத்திலுள்ள (Solar System) எட்டுக் கோள்களுள் ஒன்றாகும். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை மற்ற கோள்களாகும். புளூட்டோ எனும் சிறிய கோளும் சூரியக் குடும்ப உறுப்பினராகத்தான் கடந்த காலத்தில் இருந்தது; ஆனால் வானியலாளர்கள் வரையறுத்த கோளுக்கான அளவைவிட அது சிறியதாக இருந்தபடியால் கோள் எனும் தகுதியை இழந்து, 2006ஆம் ஆண்டு ஆகஸ்டு 24 அன்று, சூரியக் குடும்பத்திலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டது. இப்போது ’சூரியக் குடும்பம்’ எனும் சொல்லாட்சி அனைவரும் அறிந்த ஒன்றாக இருப்பினும் உலகம் அதனை அத்தனை எளிதில் கண்டடைந்துவிடவில்லை; அதற்குப் பன்னூறாண்டுகள் ஆயின என்பதுதான் வரலாறு காட்டும் உண்மை. புவி மையக் கோட்பாடு (Geocentrism): தொடக்க காலத்தில் பேருலகம் (Universe) புவியை மையமாகக் கொண்டது என்றும், ஏனைய கோள்கள் புவியையே சுற்றிவருகின்றன என்றும்தான் எண்ணியிருந்தனர் மக்கள். இந்தக் கருத்துருவுக்குப் புவி மையக் கோட்பாடு என்று பெயர். கிளாடியஸ் தாலமி (Claudius Ptolemy): எகிப்தைச் சேர்ந்த வானியல் அறிஞரும் கணிதவியலாளருமான கிளாடியஸ் தாலமி, வானியல் ஆய்வுகள் மேற்கொண்டு தாம் அறிந்துகொண்ட விவரங்களை, கி.பி.150இல் ’Almagest’ (Meaning: The Great Compilation – பெருந்தொகுப்பு) எனும் பெயரில் நூலாக வெளியிட்டார். அதில் பேருலகின் மையமாகப் புவியே விளங்குகின்றது என்றும் சூரியன், நிலவு, கோள்கள், உடுக்கள் அனைத்தும் புவியையே சுற்றிவருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். கிட்டத்தட்ட ஆயிரத்து நானூறு ஆண்டுகட்குத் தாலமியின் நூலான ’Almagest’ புவி மையக் கோட்பாட்டுக்கு வலுவான ஆதாரமாய்த் திகழ்ந்தது. தாலமிக்குப் பிறகும் நீண்டகாலத்துக்குப் புவி மையக் கோட்பாடே நிலைபெற்றிருந்தது; அதற்கு முதன்மையான காரணம் மதங்களின் செல்வாக்கே. விவிலியத்தின் ஆதியாகம நூலானது (Book of Genesis), புவியின் படைப்பு கடவுளால் வேண்டுமென்றே செய்யப்பட்ட செயலென்றும், புவியே அவரது படைப்பின் அசையாத மையப்புள்ளியென்றும் (Psalm 104:5) விவரித்தது. எனவே, கி.பி. 15ஆம் நூற்றாண்டுவரை புவி மையக் கோட்பாடே உலகோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. சூரிய மையக் கோட்பாடு (Heliocentrism): நிக்கோலஸ் கோப்பர்னிகஸ் (Nicolaus Copernicus): கி.பி. 15/16ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த போலந்து நாட்டைச் சார்ந்த கணிதவியலாளரும் வானியலாளருமான நிக்கோலஸ் கோப்பர்னிகஸ், புவி மையக் கோட்பாட்டை மறுத்துச் சூரிய மையக் கோட்பாட்டை முன்வைத்தார். 1543ஆம் ஆண்டு வெளிவந்த தமது ’De revolutionibus orbium coelestium’ (’On the Revolutions of the Celestial Spheres’ – வான்கோளங்களின் சுழற்சி) எனும் நூலில், ’சூரியனே இப்பேருலகின் மையம்; புவி அன்று எனவும், புவியும் பிற கோள்களும் சூரியனையே சுற்றிவருகின்றன’ எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். வானியல் ஆய்வில் தாம் கண்டுணர்ந்த சூரிய மையக் கோட்பாட்டை வெளிப்படுத்தி நூலெழுதியவரான கோப்பர்னிகஸ், திருச்சபை மதகுருமாராக (Clergy) இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது போலந்து நாட்டுத் திருச்சபையும் கத்தோலிக்கக் கிறித்தவத்தைச் சார்ந்ததுதான்; அதனால், தாம் கண்டறிந்து ஆவணப்படுத்திய உண்மைகளை அவர் தீவிரமாகப் பரப்புரை செய்யவில்லை; அத்தோடு கத்தோலிக்கத் திருச்சபை, இறைவனின் படைப்புக் கோட்பாட்டுக்கு எதிரான சூரிய மையக் கோட்பாட்டையும் அதனை முன்மொழிந்தவர்களையும் முழுவீச்சில் ஆராய்ந்து தண்டிப்பதற்கு முன்பாகவே அவர் இயற்கை எய்திவிட்டார். ஜோஹன்னஸ் கெப்ளர் (Johannes Kepler): ஜெர்மானிய வானியலாளரான இவர், கோப்பர்னிகஸின் சூரிய மையக் கோட்பாட்டை ஆதரித்ததோடு, அக்கோட்பாட்டை விரிவுபடுத்திக் கெப்ளரின் கோளியக்க விதிகளை (Kepler’s Laws of Planetary Motion) உருவாக்கிய சிறப்புக்குரியவராவார். கோள்கள் நீள்வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றிவருகின்றன எனும் உண்மையைத் தம் கணிதவியல் கணக்கீடுகளின் அடிப்படையில் முதன்முதலில் வெளியிட்டவரும் இவரே. கலிலியோ கலிலி (Galileo Galilei): இத்தாலிய வானியலாளரும் இயற்பியலாளருமான கலிலியோ, தொலைநோக்கியின் உதவியோடு வானியல் ஆய்வுகள் மேற்கொண்டு சூரிய மையக் கோட்பாட்டை உறுதிப்படுத்தினார். வியாழனின் நிலவுகளை அவர் கண்டறிந்தார் (இவற்றைக் கலிலியோவின் நிலவுகள் என்றழைத்தார் அவர்); இக்கண்டுபிடிப்பானது வானிலுள்ள கோள்கள் புவியைச் சுற்றிவரவில்லை என்பதற்கான சான்றாக அமைந்தது. அவ்வாறே வெள்ளிக்கோளில், நிலவையொத்த, வளர்நிலை தேய்நிலைகள் இருப்பதனை அவதானித்த அவர், வெள்ளி, சூரியனைச் சுற்றிவந்தால் மட்டுமே இவை சாத்தியம் என்பதனை உணர்ந்தார். தம் வானியல் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தி அவரெழுதிய நூலான ’Sidereus Nuncius’ (’நட்சத்திரத் தூதர்’) 1610இல் வெளியீடு கண்டது. கலிலியோவின் செயற்பாடுகளால் எரிச்சலடைந்த கத்தோலிக்கத் திருச்சபை, அவர் தம்முடைய கருத்துக்களைத் திரும்பப்பெற வேண்டும் எனும் நெருக்கடியைத் தொடர்ந்து அளித்துவந்தது. அவர் அதனை ஏற்கமறுக்கவே, அவருடைய நூல்களைத் தடைசெய்து 9 ஆண்டுகள் அவரை வீட்டுக்காவலில் வைத்தது. அப்போதும் அவர் தம் அறிவியல் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டும், நூல்களை எழுதிக்கொண்டுமே இருந்தார். அக்காலக்கட்டத்தில் அவரெழுதிய நூல்தான், ’Two New Sciences.’ நவீன இயற்பியலுக்கு (modern physics) அடித்தளம் அமைத்துத்தந்த நூலாக அது கருதப்படுகின்றது. வீட்டுக் காவலில் இருந்த சூழலிலேயே தம்முடைய 77ஆவது அகவையில் அவர் மரணமடைந்தார். சர் ஐசக் நியூட்டன் (Sir Isaac Newton): கெப்ளர், கலிலியோ ஆகியோருக்குப்பின் வந்த அறிவியலாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் நியூட்டன். இயற்பியல், கணிதம், வானியல்சார் ஆய்வுகளை அவர் மேற்கொண்டார். இயற்பியலாளராக இயக்க விதிகளையும், ஈர்ப்பு விதியையும் (the laws of motion and gravity) உருவாக்கினார். கணிதவியலாளராக கால்குலஸ் (calculus) எனும் கணிதப் பிரிவை அறிமுகப்படுத்தினார். வானியலாளராக தமக்கு முன்பு புழக்கத்திலிருந்த, கலிலியோ பயன்படுத்திய தொலைநோக்கியைப் புதுப்பித்தார். அந்தத் தொலைநோக்கியின் உதவியோடு அவர் மேற்கொண்ட ஆய்வுகள் சூரிய மையக் கோட்பாட்டுக்கு வலுசேர்ப்பனவாக அமைந்தன. 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் கெப்ளரின் கோளியக்க விதிகளும், நியூட்டனின் ஈர்ப்பு விதிகளும் சூரிய மையக் கோட்பாட்டின் உண்மைத்தன்மையை ஐயத்திற்கிடமின்றி நிறுவியபிறகு அக்கோட்பாடு அறிவியலாளர்களால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. கத்தோலிக்கத் திருச்சபை 1822ஆம் ஆண்டு கலிலியோவின் புத்தகங்களுக்கு விதித்திருந்த தடையை நீக்கி அவற்றை வெளியிட அனுமதித்தது. எனினும் கலிலியோவை நடத்திய விதத்தில் தன் தவற்றை உணர்ந்து அது மன்னிப்புக் கேட்டதென்னவோ அவர் இறந்து 350 ஆண்டுகளுக்குப் பிறகுதான். ஆம், கலிலியோ இறந்தது 1642இல்; கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான போப் இரண்டாம் ஜான் பால் (Pope John Paul II) கலிலியோ விசயத்தில் திருச்சபை தவறிழைத்துவிட்டது என்று தம் உரையினிடையே குறிப்பிட்டது 1992இல். இன்று சூரிய மையக் கோட்பாடும், அதன் நீட்சியான சூரியக் குடும்பமும் (Solar System) அனைவரும் அறிந்த ஒன்றாகிவிட்டது. 🙂 ~மேகலா இராமமூர்த்தி முழுக் கட்டுரையைப் படிக்க: https://www.vallamai.com/?p=112101 #புவிமையக்கோட்பாடு #சூரியமையக்கோட்பாடு

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar