BREAKING NEWS

இறுதி ஊர்வல ராஜதந்திரமும் ஈரானின் எழுச்சியும்.

இறுதி ஊர்வல ராஜதந்திரமும் ஈரானின் எழுச்சியும். Dr Arshath Ahamed வரலாற்றில் சில மரணங்கள் வெறும் துக்க நிகழ்வுகளாக முடிந்து விடுவதில்லை. அவை ஒரு நாட்டின் சித்தாந்தத்தை, அதன் மக்கள் சக்தியை, உலக வல்லரசுகளுக்கு எதிரான அதன் அரசியல் நிலைப்பாட்டை உரக்கச் சொல்லும் ஒரு பெரும் மேடையாக மாறிவிடுகின்றன. நவீன வரலாற்றில் ஈரானின் ஆன்மீக மற்றும் அரசியல் உச்சத் தலைவரான ஆயத்துல்லா கமேனியின் மரணமும், அவரது இறுதிச் சடங்குகளும் ஈரானிய இஸ்லாமியக் குடியரசு தனது சித்தாந்த பலத்தை உலகிற்குப் பிரகடனப்படுத்திய ஒரு வரலாற்றுப் புள்ளியாக அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது. உலகம் எத்தனையோ ஜனத்திரள்களை கண்டிருக்கிறது. ஆனால் இப்படி ஒரு பெரும் சனத்திரளை ஒருவரின் இறப்புக்கும் இரங்கலுக்கும் கண்டது இது தான் முதல் தடவை. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய வல்லரசுகள் ஈரானியப் புரட்சிக்குப் பிறகு அந்த அரசைத் தனிமைப்படுத்தவும், வீழ்த்தவும் பல்வேறு வியூகங்களை வகுத்தன. ஆயுத ரீதியாகவும், பொருளாதாரத் தடைகள் மூலமாகவும் ஈரானை முடக்க நினைத்த அமெரிக்காவிற்கு, கொமேனியின் இறுதி நாட்களும், அவரது ஜனாஸா நல்லடக்கத்தின் போது திரண்ட கோடிக்கணக்கான மக்கள் கூட்டமும் ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துக் கொண்டிருக்கின்றன. உலக அரங்கில் ஈரான் இந்த இக்கட்டான காலகட்டத்தை எவ்வாறு ராஜதந்திர ரீதியாகவும், மக்கள் சக்தி மூலமாகவும் எதிர்கொள்கிறது என்பதைப் புரிந்துகொள்வது மிக அவசியமானது. இஸ்லாமிய மரபில் ஒருவரது மறைவுக்குப் பின் உடலை மிக விரைவாக நல்லடக்கம் செய்வதுதான் பொதுவான வழமை. ஆனால், ஆயத்துல்லா கமேனியின் மறைவின் போது, அவரது உடல் உடனடியாக அடக்கம் செய்யப்படாமல், ஒரு குறிப்பிட்ட காலம் வரை பொதுமக்களின் அஞ்சலிக்காகவும், சர்வதேசத் தலைவர்களின் வருகைக்காகவும் குளிரூட்டப்பட்ட கண்ணாடிப் பேழையில் மிக கவனமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது. மரபுகளைத் தாண்டி, ஈரான் அரசு இந்த முடிவை எடுத்ததற்குப் பின்னால் ஒரு மிக ஆழமான அரசியல் மற்றும் தந்திரோபாயக் காரணம் இருந்தது. தாங்கள் எதிர்கொள்ளும் சர்வதேசப் போரிலும், பொருளாதார நெருக்கடிகளிலும் "நிச்சயமாக நாம் வெல்வோம்" என்ற ஈரானியத் தலைமையின் அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடாகவே இது பார்க்கப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிடும், மக்கள் புரட்சிக்கு எதிராக மாறிவிட்டார்கள் என்று மேற்கத்திய ஊடகங்கள் பரப்பிய பிரச்சாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஈரான் இந்தத் தறுவாயைப் சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. தங்கள் நாட்டு மக்கள் இப்போதும் தங்களோடுதான் இருக்கிறார்கள், தங்களின் இஸ்லாமியப் புரட்சிக் கொள்கைகளோடுதான் உறுதியாக நிற்கிறார்கள் என்பதை ஒட்டுமொத்த உலகிற்கும், குறிப்பாக அமெரிக்காவிற்கும் நிரூபித்துக் காட்டும் ஒரு பெரும் மக்கள் திரள் சாட்சியமாக இந்த அஞ்சலி நிகழ்வு மாற்றப்பட்டிருக்கிறது. ஆயத்துல்லா கொமேனியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவும், ஈரானின் புதிய தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் பல்வேறு அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள், தூதுவர்கள் சாரை சாரையாக வந்தவண்ணம் இருந்தனர். இந்த இடத்தில் ஈரான் தனது ஆகச்சிறந்த ஆன்மீக ராஜதந்திரத்தை (Spiritual Diplomacy) வெளிப்படுத்தியது. ஒவ்வொரு அரபு மற்றும் முஸ்லிம் நாட்டுத் தலைவரும் கொமேனியின் உடலைத் தரிசிக்க வரும்போது, அந்தந்த நாட்டின் தற்போதைய அரசியல் சூழல், ஈரானுடன் அவர்களுக்கு இருக்கும் உறவு, மற்றும் இஸ்லாமிய ஒற்றுமையின் அவசியம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, அவர்களுக்கு மிகவும் பொருத்தமான குர்ஆன் வசனங்கள் தேடித் பிடிக்கப்பட்டு, அஞ்சலி மண்டபத்தில் காதுகளில் ஒலிக்கும்படி ஈரான் அரசு ஒளிபரப்பியது. தூது வந்த தலைவர்களின் உள்ளங்களை ஆன்மீக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நெகிழச் செய்து, ஈரானின் பக்க நியாயங்களை ஏற்றுக்கொள்ள வைப்பதில் இந்த உத்தி மிக முக்கியப் பங்கு வகிக்கும் என சர்வதேச வல்லினங்கள் அபிப்பிராயப்படுகின்றனர். நாட்டின் தலைவர்கள் அமைச்சர்களையும் தாண்டி ஹிஸ்புல்லா ஹமாஸ் போன்ற அமைப்பின் முக்கிய உறுப்பினர்களும் அழைக்கப்பட்டிருந்தது இன்னும் ஒரு விஷேட அம்சமாக பார்க்கப்படுகிறது. பிராந்தியத்தில் ஈரானுக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை இது எடுத்துக்காட்டும் ஒரு நிகழ்வாக உள்ளது. ஈரானைத் தனிமைப்படுத்த நினைத்த அமெரிக்கா, கொமேனியின் மறைவுக்குப் பின்னால் அங்கு உள்நாட்டுக் கலவரம் வெடிக்கும் என்று எதிர்பார்த்தது. ஆனால், அதற்கு நேர் மாறாக, உலக வரலாற்றிலேயே மிக அதிகமான மக்கள் (ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமானோர்) திரண்ட இறுதி ஊர்வலமாக இது பதிவாகிக் கொண்டிருக்கிறது. ஆயத்துல்லா கமேனிக்கு உலகெங்கிலும் ஈரானை தாண்டியும் உள்ள பல இலட்சம் மக்கள் அஞ்சலி செலுத்துவதையும், மக்கள் அவர்பால் காட்டிய அசைக்க முடியாத விசுவாசத்தையும் கண்டு, தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போன்ற தலைவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு அந்த நிகழ்வின் பிரம்மாண்டம் அமைந்திருந்தது. தங்களின் அச்சுறுத்தல்களையும் தாண்டி, ஒரு தலைவனுக்காக இத்தனை கோடி மக்கள் தன்னிச்சையாகத் திரள்வது அமெரிக்காவின் உளவு நிறுவனங்களுக்கும், அதன் தலைவர்களுக்கும் தங்களின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வியை வெளி உலகத்திற்கு படம் போட்டு காட்டிக் கொண்டிருக்கிறது ஏற்றுக் கொள்ள முடியாத உண்மை. ஆயுத ரீதியாக ஈரான் மீது தொடுக்கப்பட்ட மறைமுகப் போர்களை, தங்களின் உள்நாட்டுத் தயாரிப்பு ஏவுகணைகள் மற்றும் பிராந்தியக் கூட்டணிகள் (Axis of Resistance) மூலம் ஈரான் வெற்றிகரமாக முறியடித்தது. அதே வேளையில், ராஜதந்திர ரீதியாக, அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளையும் மீறி சீனா, ரஷ்யா மற்றும் பிற ஆசிய நாடுகளுடன் வர்த்தக உறவுகளை பலப்படுத்தி, அமெரிக்கா கட்டமைத்த 'ஒற்றைத் துருவ உலக' (Unipolar World) ஆதிக்கத்தை ஈரான் உடைத்தெறிந்தது. சுருக்கமாகச் சொன்னால், ஆயத்துல்லா கொமேனியின் ஜனாஸாவைத் தக்க முறையில் பாதுகாத்து, மக்கள் கடலுக்கு நடுவே நடத்திய அந்த நல்லடக்கம் என்பது வெறும் சடங்கு அல்ல; அது ஈரான் சித்தாந்த ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் வல்லரசுகளுக்கு எதிராகப் பெற்ற மாபெரும் வெற்றியின் பறைசாற்றலாகும். ஒரே இறுதிச் சடங்கில் இருவேறு செய்திகளை ஈரான் உலகத்திற்கு சொல்லிக் கொண்டிருக்கிறது. இங்கேதான் வரலாற்றின் மிக விசித்திரமான, அதே சமயம் உறைந்துபோகச் செய்யும் அந்த அரசியல் முரண் ஒளிந்திருக்கிறது. அமெரிக்கா உலக அரங்கில் வல்லரசாகத் தனது 250 வருட கொண்டாட்டங்களை மிக விமரிசையாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அதே காலகட்டத்தில் தான், ஈரானும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதிச் சடங்கை நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த இறுதிச் சடங்கு வெறும் ஆயத்துல்லா கொமேனி என்ற தனிமனிதருக்கானது மட்டுமல்ல; அது அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் இத்தனை காலம் மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப் போராடிய 'ஒற்றைத் துருவ' (Unipolar) ஆதிக்கத்திற்கும், அதன் திமிர்பிடித்த ஏகாதிபத்தியத்திற்குமான இறுதிச் சடங்குதான் இது என்பது தான் இங்கே ஒளிந்திருக்கும் நிஜமான செய்தி! அமெரிக்கா தனது 250 ஆண்டு காலப் பேரரசுப் பலத்தைக் காட்ட நினைத்த அதே நாட்களில், ஈரான் தனது சித்தாந்த பலத்தால் அமெரிக்காவின் அடக்குமுறைக்கு மரண சாசனம் எழுதியது என்றால் அது மிகை இல்லை. பிற் குறிப்பு- கட்டார், சவுதி,துருக்கி, ஹிஸ்புல்லா ஹமாஸ் போன்றோருக்கு ஒலிபரப்பு செய்யப்பட்ட குர்ஆன் வசனங்களை பார்க்கும் போது ஈரானின் ராஜதந்திரம் எவ்வளவு வலிமையாகது என்பதை கண்டு கொள்ள முடியும். கீழே கமெண்டில் அந்த வசனங்கள்

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar